தடையில்லா மின்சாரம் மற்றும் மின் விபத்துக்களைத் தவிர்க்க தமிழ்நாடு மின்சார வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொதுமக்களின் பாதுகாப்பிற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தடையில்லா, தரமான மின்சாரத்தை உறுதி செய்யும் உயரிய நோக்குடன் தமிழ்நாடு மின்சார வாரியம் செயல்பட்டு வருகிறது. அண்மையில் நிகழ்ந்த மின்விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இப்பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 618 திறந்த வெளியில் காணப்பட்ட புதைவட கம்பிகள் மற்றும் இணைப்புகள் மண்ணில் புதைக்கப்பட்டு, இணைப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள மற்றும் பொதுமக்களால் சுட்டிக்காட்டப்பட்ட 633 இடங்களில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதால் ஏற்படும் மின் விபத்துக்களைத் தவிர்க்க, 1148 மின் பகிர்மானப் பெட்டிகள் (Pillar Boxes) மற்றும் 127 மின் மாற்றிகள் (Dist. Transformers) தகுந்த உயரத்தில் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளன. மின் தடவாளப்பொருட்கள் தேவையான அளவு கையிருப்பில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையை தவிர்த்து மாநிலத்தில் பிற பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளுக்குத் தேவையான மின் தடவாளப்பொருட்கள் வழங்கப்படுகின்றன. இது தவிர, பொது இடங்களில் பந்தல்கள் மற்றும் தற்காலிக அமைப்புகளை நிறுவும் ஒப்பந்ததாரர்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகளிலிருந்து இருந்து போதிய பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும். தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை மாநகரில், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பிற சேவைத்துறைகள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் போது, ஒப்பந்ததார்களால் புதைவட மின்பாதைகளில் பாதிப்பு ஏற்படாத வகையிலும், ஏதேனும் பாதிப்பு ஏற்படின் உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்புகளில் மின்அளவிகள் (Meter) பொருத்தப்பட்டுள்ள இடங்கள் மற்றும் சுவர்களுக்கு அருகில் செல்லும் புதைவடக்கம்பிகளில் ஏற்படக்கூடிய பழுது அல்லது மின்கசிவு சம்பவங்களைத் தவிர்க்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மின்வாரிய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்வதை உறுதிப்படுத்த அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர்கள் மின்சாரத் துறை சார்ந்த குறைப்பாடுகளை சரிசெய்ய 24 மணிநேரமும் செயல்படும் தொலைபேசி சேவை மையமான மின்னகத்தினை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.