தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் இன்று (05.11.2025) நடைபெற்று வருகிறது. காலை 11 மணியளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் கரூர் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள், பூத் கமிட்டி அமைப்பது தொடர்பானிகள், தொண்டர் அணி பணிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அதாவது அழைப்பு கடிதம் மற்றும் அக்கட்சியின் அடையாள அட்டை வைத்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே கூட்டம் நடைபெறும் அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. தலைமையிலான கூட்டணி அமைக்கப்படும். இந்த கூட்டணிக்கான முடிவு, அதற்கான அனைத்து அதிகாரமும் அக்கட்சியின் தலைவர் விஜய் முடிவெடுப்பார் என இந்த குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யக்கூடிய நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டாமல் தமிழக மீனவர்களை விடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக மாநில அரசும் கூடுதலாக அழுத்தம் கொடுக்க வேண்டும். தற்போது பருவமழை தொடங்கி உள்ள சூழலில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதில் தொடர்ச்சியாகத் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதோடு கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும்.
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் நடவடிக்கைக்கு அனுமதி அளிக்கக் கூடாது. பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கோவையில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட 12 தீர்மானங்கள் த.வெ.க சிறப்புப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Follow Us