தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 தேர்தலை எதிர்கொள்வதற்கு திமுக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அடுத்தகட்டமாக தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் திமுக மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அறிவித்துள்ளது. திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அந்த குழுவில் டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன், டி.கே.எஸ்.இளங்கோவன், கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கார்த்திகேய சிவசேனாதிபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் தேர்தல் அறிக்கை குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த குழு அனைத்து தரப்பு மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு குழுவாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தகரணி, தொழில்துறை மற்றும் மருத்துவர், சுற்றுச்சூழல், மகளிர் அணி, இந்திய ஆட்சி பணி அதிகாரி என அனைத்து தரப்பின் கருத்துக்களை கேட்கும் வகையில் இந்த குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுநல சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், தோழமை இயக்கத்தினருடன் கலந்து ஆலோசனை செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/17/a762-2025-12-17-16-36-55.jpg)