பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த இந்தியா கூட்டணி; தேர்தல் ஆணையர் சொன்ன தகவல்!

biharsir

Election Commissioner's says no one left out at India Alliance opposes Bihar voter list Special Intensive Revision

பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 20 தலைவர்கள் கடந்த 2ஆம் தேதி தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில் மேற்கொள்ளப்படும் இந்த திருத்தத்தால், பீகாரில் 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடக்கும் அதே வேளையில், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் 2026 இல் நடைபெற உள்ளன. பீகாரில் தொடங்கி அடுத்தடுத்து நடைபெறும் மற்ற மாநிலத் தேர்தல்களில் சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலை தீவிரமாக மதிப்பாய்வு செய்து, புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் பிறந்த இடத்தை சரிபார்த்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு மத்தியில், இந்த நடவடிக்கையால் அனைத்து தகுதியுள்ள மக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். பூத் நிலை அதிகாரிகள் குழுவில் உரையாற்றிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், “22 ஆண்டுகளுக்குப் பிறகு பீகாரில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அனைத்து தேர்தல் ஊழியர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் மிகவும் வெளிப்படையான முறையில் அட்டவணைப்படி நடைபெற்று வருகிறது.  சில நபர்கள் ஆட்சேபனை தெரிவித்ததால், அனைத்து தகுதியுள்ள மக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சிறப்பு திருத்தம் உறுதி செய்யும். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் சேர்ப்பதும், தகுதியற்றவர்களை நீக்குவதும்தான் சிறப்பு திருத்த நடவடிக்கையின் குறிக்கோள். யாரையும் நியாயமற்ற முறையில் ஒதுக்கி வைப்பது அல்ல” என்று உறுதி கூறியுள்ளார். 

Bihar election commision of india INDIA alliance voter list
இதையும் படியுங்கள்
Subscribe