பா.ஜ.கவுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா தேர்தல், 2023இல் நடந்த கர்நாடகா தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களிலும் பா.ஜ.கவுக்காக ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார்.

Advertisment

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என மொத்தம் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி ஆதாரங்களை வெளியிட்டு மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருப்பினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நாட்டு மக்களிடம் அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறது.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று (17-08-25) செய்தியாளர்களைச் சந்தித்து பல்வேறு விளக்கங்களை அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி நடக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஆணையம் சர்சமமாக நடத்துகிறது. வாக்குகள் திருடப்படுகின்றன என தவறான சொற்களை பயன்படுத்தி மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். யாருக்காகவும் அரசியல் சாசன கடமையில் இருந்து தேர்தல் ஆணையம் பின்வாங்காது. வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் அரசமைப்புக்கு அவமதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலர் பொய்களையும் மக்களிடையே அச்சத்தையும் விதைக்க முயற்சிக்கின்றனர்.

வாக்குத் திருட்டு உள்ளிட்ட புகார்களை கண்டு தேர்தல் ஆணையம் அஞ்சாது. சில வாக்காளர்கள் இருமுறை வாக்களித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆதாரம் கேட்கும்போது பதில் இல்லை.  இந்திய வாக்காளர்கள், தேர்தல் ஆணையத்தை குறிவைத்து அரசியல் செய்ய முயற்சி நடக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர்களின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பக்கூடாது. 7 கோடிக்கும் மேலான பீகார் வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துடன் நிற்கின்றனர். பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். மக்களவைத் தேர்தலில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பூத் நிலை முகவர்கள், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடி முகவர்கள் தேர்தலுக்காகப் பணியாற்றுகிறார்கள். இவ்வளவு மக்கள் முன்னிலையில், எந்த வாக்காளரும் வாக்குகளைத் திருட முடியுமா?

Advertisment

ராகுல் காந்தி தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். 7 நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் பெறப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்” என்று கூறினார்.