Election Commission sent notice for Prashant Kishor name registered in 2 states vote
பீகார் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடைபெற நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரஷாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் ஒன்று அனுப்பியுள்ளது.
பீகார் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அதே வேளையில், தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம், பீகாரில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளதாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில், ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோரின் பெயர், பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது.
அதாவது, பீகாரின் கர்கஹார் சட்டமன்றத் தொகுதியிலும், மேற்கு வங்கத்தின் பபானிபூர் சட்டமன்றத் தொகுதியிலும் பிரஷாந்த் கிஷோரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. 1950ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 17இன் கீழ், ஒரு நபரை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகப் பதிவு செய்ய முடியாது. இந்த விதியை மீறினால் சட்டத்தின் பிரிவு 31இன் கீழ் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இரண்டு தனித்தனி மாநில வாக்காளர் பட்டியலில் பிரஷாந்த் கிஷோரின் பெயர் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பிரஷாந்த் கிஷோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரஷாந்த் கிஷோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பீகார் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us