பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,

இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குறியாக்கியது. அதன் பின்னர், தேஜஸ்வி யாதவின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்தது.

Advertisment
tejas
Tejashwi yadav

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பீகார் துணை முதல்வரும் பா.ஜ.க மூத்த தலைவருமான விஜய் குமார் சின்ஹாவின் இரண்டு வாக்காளர் அட்டைகளை வைத்திருப்பதாக தேஜஸ்வி யாதவ் மீண்டும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “விஜய் குமார் சின்ஹா இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள இரண்டு வெவ்வேறு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர். அவரது பெயர் ஒரே மாவட்டத்தில் உள்ள லக்கிசராய் சட்டமன்றத் தொகுதியிலும், பாட்னா மாவட்டத்தில் உள்ள பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலும் உள்ளது. அவருக்கு இரண்டு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டை அட்டைகள் உள்ளன. ஆச்சரியப்படும் விதமாக, பீகாரில் தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்ட பிறகு இது நடந்துள்ளது. சின்ஹா அல்லது தேர்தல் ஆணையம் யார் பொறுப்பேற்க வேண்டும்? சின்ஹா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? வெளிப்படுத்தப்பட்ட பிறகு சின்ஹா எப்போது பதவியை ராஜினாமா செய்வார்?” என்று குறிப்பிட்டு இரண்டு தொகுதிகளில் சின்ஹாவின் பெயர் குறிப்பிட்டுள்ளதைக் காட்டும் ஆவணங்களை பகிர்ந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஜய் குமார் சின்ஹா, “முன்னதாக, பங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன. ஏப்ரல் 2024 இல், லக்கிசராய் தொகுதியில் எனது பெயரைச் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன். பங்கிபூரில் இருந்து எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீக்குவதற்கான படிவத்தையும் நிரப்பினேன். என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. ஏதோ காரணத்தால், பங்கிபூரில் இருந்து எனது பெயர் நீக்கப்படவில்லை, அது வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது. நான் பூத் நிலை அதிகாரியை அழைத்து எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, பங்கிபூரில் இருந்து எனது பெயரை நீக்கக் கோரும் ரசீதை எடுத்தேன். என்னிடம் இரண்டு ஆவணங்களும் உள்ளன. ஒரே ஒரு இடத்தில் இருந்துதான் வாக்களித்தேன். கடந்த முறையும் ஒரே ஒரு இடத்திலிருந்துதான் வாக்களித்தேன். தேஜஸ்வி தவறான உண்மைகளைக் கூறி மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். அவர் மற்றவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விளையாட்டை விளையாடுகிறார் என்பது முழு பீகாருக்கும் தெரியும். என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.

இந்த நிலையில், இரண்டு தொகுதியில் வாக்காளர் அட்டை வைத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் விஜய் குமார் சின்ஹாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவருக்கு இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் ஏன் உள்ளன என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.