கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், மகாராஷ்டிரா தேர்தலிலும், கர்நாடகா தேர்தலிலும் பா.ஜ.கவுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் மிகப்பெரிய முறைக்கேட்டில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதனால், தேர்தல் ஆணையத்துக்கும் ராகுல் காந்திக்கும் இடையே வார்த்தை தொடர்பான மோதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், நாட்டில் எந்தெந்த மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்ற தரவுகளை காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் ராகுல் காந்தி இன்று (07-08-25) வெளியிட்டுள்ளார். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, “வாக்காளர் பட்டியலில் போலியான நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியின் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் பெரும் திருட்டு நடந்துள்ளது. மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் 6.5 லட்சம் வாக்குகளில், 1 லட்சத்திற்கும் அதிகமாக வாக்கு திருட்டு நடந்துள்ளது. காங்கிரஸ் நடத்திய ஆய்வில் மகாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள், செல்லாத முகவரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் கடும் போட்டி ஏற்பட்டது. வாக்கு எண்ணிக்கையின் போது பெரும்பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மன்சூர் அலிகான் முன்னிலை வகித்தார். ஆனால், இறுதி முடிவுகளில் பா.ஜ.க வேட்பாளர் பிசி மோகன் 32,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். காங்கிரஸ் 6,26,208 வாக்குகளையும், பா.ஜ.க 6,58,915 வாக்குகளையும் பெற்றது. 7தொகுதிகளில் 6 தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் மகாதேவபுரா தொகுதியில் 1,14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. 1,00,250 வாக்குகள் திருடப்பட்டிருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள் இருக்கின்றனர். 33,692 வாக்காளர்கள் புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6ஐ தவறாக பயன்படுத்தியுள்ளனர்” என்று கூறி ஆதாரங்களோடு தரவுகளை வெளியிட்டார்.
ராகுல் காந்தி பகிர்ந்த விளக்கக்காட்சியில், வாக்காளர் பட்டியலில் ஒரே வாக்காளர் பல முறை இடம்பெற்றிருப்பதையும், பல மாநிலங்களில் ஒரே வாக்காளர் இருப்பதையும், வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி இல்லாமல் இருப்பதும், ஒரே முகவரில் ஏராளமான வாக்காளர்கள் இருப்பதும், வாக்காளர் அடையாளர் அட்டைகளில் மைரோசைஸ் செய்யப்பட்ட புகைப்படங்களும், முதல் முறையாக வாக்காளர்களுக்கான படிவம் 6இன் தவறாக பயன்படுத்திருப்பதையும் காண முடிந்தது. மின்னணு தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்கப்படாததால் காகித்தால் ஆன வாக்காளர் பட்டியலை ஆராய்ந்து 6 மாதத்தில் ஒரு தொகுதியில் இவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருப்பதை கண்டுபிடித்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் முதன் முறையாக தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, ‘தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தகுதியற்றவர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் புகார் அளித்துள்ளார். அவர் மக்களை தவறாக வழிநடத்துகிறார். ராகுல் காந்தி கூறுவது உண்மை என்று அவர் நம்பினால் வாக்காளர் பதிவு விதிகள் 1960இன் விதி 20(3)(b)இன் படி பிரமாணத்தில் கையொப்பமிட்டு இன்று மாலைக்குள் கர்நாடகா தலைமை நிர்வாக அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். அப்போது தான் தேவையான நடவடிக்கைகள் எடுக்க முடியும். தான் கூறுவதை அவர் நம்பவில்லை என்றால் அபத்தமான கூற்றுக்களை கூறி இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.