பீகார் மாநிலத்தில், இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடக்கும் அதே வேளையில், அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் 2026 இல் நடைபெற உள்ளன. பீகாரில் தொடங்கி அடுத்தடுத்து நடைபெறும் மற்ற மாநிலத் தேர்தல்களில் சிறப்பு திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலை தீவிரமாக மதிப்பாய்வு செய்து, புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் பிறந்த இடத்தை சரிபார்த்து அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.

பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்குகள், கடந்த 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோமால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஆதார்,  தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, பட்டியலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகிறார்கள்.

இந்த நிலையில், பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நீக்கப்பட்ட பெயர்களில் இறந்ததாகக் கூறப்படும் 18 லட்சம் வாக்காளர்கள், பிற தொகுதிகளுக்குச் சென்ற 26 லட்சம் பேர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்ட 7 லட்சம் பேர் அடங்குவர் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பீகாரில் நடந்து வரும் சிறப்பு தீவிர திருத்தத்தின்படி, ஆகஸ்ட் 1, 2025 அன்று வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் அனைத்து தகுதியுள்ள வாக்காளர்களும் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் சந்திப்புகளை நடத்தி, இதுவரை படிவங்கள் பெறப்படாத 21.36 லட்சம் வாக்காளர்களின் விரிவான பட்டியலையும், இறந்ததாகவோ அல்லது நிரந்தரமாக மாற்றப்பட்டதாகவோ அல்லது பல இடங்களில் சேர்ந்ததாகவோ கூறப்படும் கிட்டத்தட்ட 52.30 லட்சம் வாக்காளர்களின் பட்டியலையும் பகிர்ந்துள்ளனர். முழு செயல்முறையும் முடிந்த பிறகு, இறுதிப் பட்டியல் செப்டம்பர் 30 அன்று வெளியிடப்படும்’ என்று தெரிவித்துள்ளது. ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 12 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள், 4 லட்சம் தன்னார்வலர்கள் மற்றும் 1.5 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கல் ஆகியோர் இந்த செயல்பாட்டில் உதவுகிறார்கள் என்று கூறப்படுகிறது.