தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisment

அதேபோல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.  

Advertisment

இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பிப்ரவரி நான்கு மற்றும் ஐந்தாம் தேதி டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. இது தொடர்பாக ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த உள்துறை செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள், பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment