பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அந்த வகையில் ராகுல் காந்தி பல்வேறு தரவுகளுடன் இன்று (18.09.2025) செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அதில், “முதலில், இது ஹைட்ரஜன் குண்டு அல்ல. ஹைட்ரஜன் குண்டு அடுத்து வரப்போகிறது. இந்த நாட்டின் இளைஞர்களுக்கு தேர்தல்களில் எவ்வாறு மோசடி செய்யப்படுகிறது என்பதை விளக்கிக் காட்டுவதில் இது மற்றொரு மைல்கல். ஆலந்து என்பது கர்நாடகாவில் உள்ள ஒரு தொகுதி. யாரோ ஒருவர் 6018 வாக்குகளை நீக்க முயன்றார். 2023 தேர்தலில் ஆலந்தில் நீக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை பற்றி எங்களுக்குத் தெரியாது.
அவை 6,018 வாக்குகளை விட மிக அதிகம். ஆனால் அந்த 6018 வாக்குகளை நீக்கும்போது யாரோ ஒருவர் பிடிபட்டார். அதுவும் தற்செயலாகப் பிடிபட்டார். அங்குள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரி தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டிருப்பதைக் கவனித்தார். எனவே அவர் தனது மாமாவின் வாக்கு நீக்கப்பட்டது யார் என்று சரிபார்த்தார். அப்போது அந்த வாக்கை நீக்கியது பக்கத்து வீட்டுக்காரர் என்பதைக் கண்டுபிடித்தார். அவர் தனது பக்கத்து வீட்டுக்காரரிடம் இது குறித்து கேட்டார். ஆனால் நான் எந்த வாக்கையும் நீக்கவில்லை என்று சொன்னார்கள். வாக்கை நீக்க சொன்னவருக்கும், வாக்கை நீக்கியவருக்கும் எதுவும்தெரியாது என்றால் வேறு ஏதோ ஒரு சக்தி செயல்முறையை பயன்படுத்தி வாக்கை நீக்கியது. இந்திய ஜனநாயகத்தை அழித்தவர்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பாதுகாத்து வருகிறார். இதனை ஞானேஷ் குமார் நிறுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது. அதில், “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை ஆகும். எந்த வாக்காளரையும் தேர்தல் ஆணையம் நீக்கவில்லை. மேலும், ‘ஆன்லைன் மூலமாக வாக்காளர்களை நீக்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. தேர்தல் ஆணையத்தின் மென்பொருளைப் பயன்படுத்தி இந்த மோசடியை அரங்கேற்றுவதற்கு முயற்சிகள் நடக்கின்றன’ என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். ஆனால் அவ்வாறு எந்த வாக்காளரையும் ஆன்லைன் மூலம் நீக்க முடியாது” என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.