Election Commission announces victory of BJP alliance Photograph: (BJP)
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதியும் (06.11.2025), 122 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு கடந்த 11ஆம் தேதியும் (11.11.2025) நடைபெற்றன. இந்த தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (N.D.A.), காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா கூட்டணி), தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. இத்தகைய சூழலில் தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு எண்ணும் பணி இன்று (14.11.2025) காலை 8 மணியளவில் தொடங்கியது.
பெரும்பாலான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்த நிலையில் காலையில் இருந்தே பாஜக கூட்டணி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக மொத்தமுள்ள 235 தொகுதிகளில் 229 தொகுதிகளின் நிலவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக 87 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில் 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 78 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் 23 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் 2 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. லோக் ஜனசக்தி 18 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலை வகித்து வருகிறது. 6 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனால் பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Follow Us