Election Commission announces additional time to add names to voter list
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் 4ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நடத்தி வந்தது. அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19ஆம் தேதி வெளியானது.
அதில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்குகாளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. எஸ்.ஐ.ஆருக்கு முன் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 பேர் வாக்காளர்களாக உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான புதிய விண்ணப்பத்தை ஜனவரி 18ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்களை சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் முகாம் நடத்ததப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயர்களை மீண்டும் சேர்ப்பதற்கு நேற்று (18-01-26) தான் கடைசி நாள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கக்கோரி நேற்று வரை 13 லட்சத்து 3,487 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், இதுவரை 13 லட்சத்து 3,487 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயர்களை சேர்ப்பதறான கால அவகாசத்தை ஜனவரி 30ஆம் தேதி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நேற்றோடு கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த கால அவகாசம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இறுது வாக்காளர் பட்டியல் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us