புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா அலஞ்சிரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மனைவி சிவமாலை (வயது 69). கடந்த ஆண்டு சிவமாலையின் கணவர் அடைக்கலம் இறந்துவிட்டார். அதன் பிறகு மகன்களுடன் வசிக்கும் சிவமாலை பால் மாடு வளர்த்து வருகிறார். தினசரி காலை 4 மணிக்கு பால் கறப்பது வழக்கம்

Advertisment

அதே போல, கடந்த வாரம் வெள்ளிக் கிழமை அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து சற்று தூரத்தில் உள்ள கொட்டகையில் நிற்கும் பால் மாட்டில், பால் கறப்பதற்காக சிவமாலை தனியாக எழுந்து வந்த போது சாலை ஓரம் மறைவில் இருந்து வெளியே வந்த மர்ம நபர் ஒருவர், சிவமாலை பின் பக்க தலையில் கம்பியால் தாக்கினார். அடி விழுவதை உணர்ந்த திரும்பிய போது மீண்டும் முன்பக்க தலையிலும் தாக்கிவிட்டு சிவமாலை கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு மர்ம நபர் தென்னந்தோப்பிற்குள் ஓடி மறைந்துவிட்டார். காயமடைந்த சிவமாலை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேராக்கப்பட்டார்.

Advertisment

இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை தாக்கி சங்கிலி பறித்துச் சென்ற நபரை தேடி வந்தனர். உள்ளூர் நபர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆலங்குடி டிஎஸ்பி தனிப்படை போலீசாரின் விசாரணையில், பெரியாளூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் ரமேஷ் (42) என்பவர் கடந்த 10 நாட்களாக அதிகாலை நேரத்தில் டீ கடைக்கு நடந்து சென்றதாகவும், சம்பவம் நடந்த அன்று காணவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர். அதன் பிறகு அவரது நடமாட்டத்தை கண்காணித்த தனிப்படையினர் ஆவணத்தான்கோட்டை கிராமத்தில் உள்ள நகை அடகு கடைகளில் ஆய்வு செய்தனர். அதில் மூதாட்டியிடம் பறித்துச் செல்லப்பட்ட சங்கிலி ஒரு அடகு கடையில் ரூ.70 ஆயிரத்திற்கு அடகு வைத்திருந்தது தெரிய வந்தது.

அந்த சங்கிலியை அடகு வைத்து பணம் வாங்கியது போலீசார் கண்காணிப்பில் உள்ள ரமேஷ் தான் என்பதும் உறுதியான நிலையில் ரமேஷை பிடித்த போலீசார் அடகு வைத்த நகையை மீட்டனர். தொடர்ந்து நடந்த விசாரனையில், குழுவில் வாங்கிய கடன் தவணை செலுத்த பணமில்லை. தவணை கட்டவில்லை என்றால் கடன் வசூலுக்கு வருபவர்கள் ரொம்ப அதிகமாக திட்டுவார்கள். அதனால் பணத்திற்காக அலைந்தேன். அப்ப தான் இந்த மூதாட்டி பால் கறக்க காலையில் வருவதை பல நாட்களாக பார்தேன். வெள்ளிக்கிழமை காலை மூதாட்டியை தாக்கி சங்கிலியை பறித்துக் கொண்டு புதுக்கோட்டை வரை போய் திரும்பி ஊருக்கு வந்து நகையை அடகு வைத்து ரூ.70 ஆயிரம் பணம் வாங்கி குழுக்கடன் ரூ.25 ஆயிரம் கட்டினேன் என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.    

Advertisment