உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் ஆனந்த் நிகேதன் விருத் சேவா என்ற முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில், ஒரு வயதான பெண் கட்டப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை அனுபவித்து வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து லக்னோவில் உள்ள சமூக நலத்துறைக்கு தகவல் சென்றது. அதன் பின்னர், சம்பந்தப்பட்ட முதியோர் இல்லத்தில் சோதனை நடத்த வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டனர்.

Advertisment

அதன் பேரில் மாநில மகளிர் ஆணையம், நொய்டா காவல்துறை, சமூக நலத்துறை ஆகியவை இணைந்து இன்று அதிரடி சோதனையிட்டது. அந்த சோதனையில், முதியோர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒரு வயதான பெண் துணியால் கட்டப்பட்டு ஒரு அறையில் பூட்டப்பட்டிருப்பதையும், ஆண்கள் இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பல முதியோர்கள் சரியான ஆடைகள் இல்லாமல் இருந்துள்ளனர். சில வயதானவர்கள் சிறுநீர் மற்றும் மலம் கழித்த துணிகளோடு இருந்துள்ளனர். அவர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், முதியோர் இல்லத்தின் பெண் செவிலியரிடம் விசாரித்துள்ளனர். அவர் 12ஆம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளார் என்பதும் முதியோர்களை அனுமதிக்க நன்கொடையாக ரூ.2.5 லட்சமும், தங்குமிடம் மற்றும் உணவுக்காக மாதத்திற்கு ரூ.6,000 வசூலித்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த சோதனையை தொடர்ந்து, இல்லத்தில் இருந்த 40 முதியவர்களையும் மீட்டு இல்லத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.