வேலூர் மாவட்டம், ஊசூர் அருகே புளியமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் காசி (வயது 60) என்ற முதியவர். இவர், தனது உறவினர்கள் நிலம் தொடர்பாக அடிக்கடி பிரச்சனை செய்து, கொலை மிரட்டல் விடுப்பதாக பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கோரி மனு அளித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 21, 2025) திங்கள் கிழமை, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், திடீரென தன்மீது டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, அருகே இருந்த காவல்துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து, முதியவரை முதலுதவி சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவத்தால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர், முதியவரின் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.