Eknath Shinde to quit coalition politics is a stir in Maharashtra politics
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ‘மகாயுதி’ என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில துணை முதல்வர்களாக சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் பொறுப்பு வகித்து வருகின்றனர். மகாயுதி கூட்டணிக்குள் அவ்வப்போது சலசலப்பு ஏற்பட்டாலும், கூட்டணியை கைவிடாமல் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி நடத்தி வருகிறார்.
இம்மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கூட்டணி எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தரமற்ற உணவு கொடுத்ததால் கேண்டீன் ஊழியரை சிவசேனா கட்சி எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் என்பவர் கடுமையாக தாக்கி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதனை தொடர்ந்து, சிவசேனா கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்.எல்.ஏ சஞ்சய் ஷிர்சாத் வீட்டில் பணப்பையுடன் இருந்து சர்ச்சையில் சிக்கினார். இந்த இரண்டு நிகழ்வுகளும் அம்மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கடியை கொடுத்தது. இதற்கு முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீநாத் ஷிண்டே வருமானத்திற்கு சொத்து வைத்திருப்பதாக எழுந்த புகாரில் வருமான வரித்துறை, ஸ்ரீநாத் ஷிண்டேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், ஏக்நாத் ஷிண்டேவின் உதவியாளர், அமித்ஷங்கே மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் கடும் அதிருப்தியில் ஏக்நாத் ஷிண்டே டெல்லிக்குச் சென்று சில விஷயங்களை உறுதிப்பட தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக கூட்டணி அரசியலில் இருந்து விலகி வெளியே இருந்து ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்போவதாக ஏக்நாத் ஷிண்டே கூறியதாகக் கூறப்படுகிறது.
கடந்தாண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகாயுதி கூட்டணியில் அடுத்த முதல்வர் யார் என்ற குழப்பம் இருந்தது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, பா.ஜ.க தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுப் பதவி ஏற்றதில் இருந்து முதல்வர் பதவி மறுக்கப்பட்டதாலும், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக பா.ஜ.க மீது ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விடுத்த ஒவ்வொரு அழைப்புகளையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஏக்நாத் ஷிண்டே புறக்கணித்து வந்தார். இது மகாராஷ்டிரா அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஆளும் கூட்டணியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே விலகுவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 288 உறுப்பினர்கள் கொண்ட மகாராஷ்டிரா பேரவையில், பா.ஜ.கவுக்கு 132 உறுப்பினர்களும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 57 உறுப்பினர்களும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு 41 உறுப்பினர்களும், பிற கட்சியில் இருந்து 5 உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.