மகாராஷ்டிராவில் மஹாயுதி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். சிவசேனாவின் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஜனவரி 15 அன்று மும்பை, நவிமும்பை, புனே, நாக்பூர், தானே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடுத்த நாள் ஜனவரி 16ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
29 மாநகராட்சிகளில் உள்ள 2869 கவுன்சிலர் இடங்களில் ஆளும் மகாயுதி கூட்டணியான பா.ஜ.க - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, 28 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவசேனாவில் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியை ஆளும் மகாயுதி கூட்டணி கைப்பற்றியுள்ளது. மும்பை மாநகராட்சியின் மொத்தம் 227 கவுன்சிலர் இடங்களில், பா.ஜ.க 89 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 29 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளதை அடுத்து, நாட்டின் பணக்கார உள்ளாட்சி அமைப்பான மும்பை மாநகராட்சியின் மேயர் பதவியைக் கைப்பற்றுவதற்காக, மகாயுதி கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் சிவசேனா (ஷிண்டே) விற்கும் இடையே போட்டி நிலவி வருகிறது. இதன் காரணமாக மொத்த மாநகராட்சிகளில் மும்பை மீதுதான் அனைவரது கவனமும் உள்ளது. மேலும், மும்பைக்கு யார் மேயராக வருவார்கள் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை மாநகராட்சியை பொறுத்தவரையில், ஷிண்டேவிடம் 29 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர், அதே நேரத்தில் பாஜக 89 மாமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருவரும் சேர்ந்து 118 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 114 இடங்களை விட நான்கு அதிகம். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) மூன்று மாமன்ற உறுப்பினர்களையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 121 ஆக உயர்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து மும்பைக்கு மகாயுதி கூட்டணியைச் சேர்ந்த ஒருவரே மேயராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 114 இடங்கள் எந்த கட்சிக்கும் இல்லாத நிலையில் கூட்டணி மூலமாகவே மேயரை தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகாயுதி கட்டணிக்குள் இருக்கும் சிவசேனா (ஷிண்டே) முதல் 2.5 ஆண்டுகள் மேயர் பதவி தங்கள் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என பாஜகவிற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தங்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர்களை, பா.ஜ.க பேரம் பேசி அவர்களது பக்கம் இழுத்து விடாமல் இருக்க அவர்களை பாதுகாப்பாக ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கவைத்துள்ளார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், “மும்பையின் மேயர் பதவி குறித்து ஷிண்டேவுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுகமான தீர்வு கொண்டுவரப்படும். மேலும், நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்தவித முரண்பாடுமில்லை. நாங்கள் இணைந்தே மும்பையை நிர்வகிப்போம்” என பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/eknathdeven-2026-01-20-09-27-28.jpg)