பிப்ரவரி 1 அன்று, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு 2026-2027 நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், மக்களுக்குப் பயனளிக்கும் எந்தவித அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. குறிப்பாக, கேரளா எம்பிக்களும் தங்கள் மாநிலத்திற்கு எந்தவித நலத்திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல்கள் வர இருப்பதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் பல நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதோடு அதிக அளவிலான நிதியும் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு எதுவும் நடைபெறாமல் போனதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றன. கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இந்த பட்ஜெட் குறித்த விமர்சனங்களை முன் வைக்கும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் தமிழ்நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ளன.
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில் பாஜக-அதிமுக கூட்டணி கூட்டணியின், மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி முட்டை (0) எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் வகையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், ‘மத்திய அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு’ என்ற வாசகம் பொருந்திய போஸ்டர்களும் நெல்லையில் ஒட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், ‘தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய எந்த நிதியையும் மத்திய அரசு தருவதில்லை. மேலும், தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. குறிப்பாக, அந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லை’ என அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த போஸ்டர்களால் தென் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/05/muddai-2026-02-05-19-56-27.jpg)