'Edappadi's betrayals are longer than the Great Wall of China' - MK Stalin's criticism Photograph: (mkstalin)
இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் மாநாடு தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில் ''கேட்காமலே திட்டங்களை வாரி வழங்குவது தான் திராவிடம் மாடல். இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறீர்கள். நான் இந்த மாநாட்டிற்கு வருவதற்கு முன்பு இந்த மாநாட்டில் முடிந்தவரை எல்லா கோரிக்கைகளும் வைத்துவிட வேண்டும் என அன்பின் மிகுதியால் அதிகமான கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். நீங்கள் கோரிக்கை வைத்தால் உங்கள் நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டியது என்னுடைய பொறுப்பு.
இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்களுக்கான அறிவிப்புகளை சொல்லாமல் போக முடியுமா. அதுவும் ஆயிரக்கணக்கானோரை கூட்டி வைத்து இந்த கோரிக்கைகளை எடுத்து வைக்கும் நேரத்தில் நானும் இந்த மாநாட்டில் ஐந்து முக்கிய அறிவிப்புகளை உங்களுக்காக, உங்களின் ஒருவனாக வெளியிட விரும்புகிறேன். முதலாவது அறிவிப்பு தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு பெற்று உள்ள உலமாக்களுக்கு இனி ரூ.5000 ரூபாய் ஓய்வூதியமாகவும், 2500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு உலாமாக்களுக்கு இருசக்கர வாகனம் மானிய தொகை 50 ஆயிரம் வழங்கப்படும். மூன்றாவது அறிவிப்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூடுதலாக ஒரு வக்பு வாரிய தீர்ப்பாயம் அமைக்கப்படும். நான்காவது அறிவிப்பு கல்லறை தோட்டம் இல்லாத இடங்களில் மாநகராட்சிகளில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை அமைக்கப்படும். ஐந்தாவது அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 உருது ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்.
இஸ்லாமிய மக்களுக்கு எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களை எண்ணி பார்த்தால் அது சீன பெருஞ்சுவரை விட நீளமானது. அவருக்கு தெரிந்ததெல்லாம் இரண்டு தான் ஒன்று காலில் விழுவது இன்னொன்று காலை வாரி விடுவது. அப்படிப்பட்டவர் இஸ்லாம் மக்களுக்கு செய்த துரோகங்களை சொல்ல வேண்டும் என்றால் அந்த பட்டியலும் ரொம்ப பெரியது'' என்றார்.
Follow Us