விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக செங்கோட்டையன் டெல்லி சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''நாங்கள் இதில் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. இதைப் பார்க்க வேண்டியது அதிமுகவினர். இது அவர்கள் உட்கட்சி விவகாரம். இதை அவர்களிடமே கேட்டு நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். எல்லாம் 'போக போக தெரியும்...' என்றார்.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அம்மா க்ளினிக்குகளை திமுகவினர் ஆட்சிக்கு வந்தது மூடிவிட்டார்கள் என ஒவ்வொரு இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டாக வைக்கிறார் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு ''நீங்கள் பார்க்கிறீர்களே எங்காவது அம்மா கிளினிக்கு மூடி இருக்கிறார்களா? தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அவர் ஏதோ அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக பேசுகிறார். அம்மா கிளினிக் ஒரு வருடம் மட்டுமே செயல்பட வேண்டும் என்று ஒன்றிய அரசின் விதிகளில் சொல்லி இருக்கிறார்கள். இருந்தாலும் அதற்கு பதிலாக தமிழக முதல்வர் 'மக்களை தேடி மருத்துவம்'என எல்லாம் ஊர்களுக்கும் எல்லாம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி அரசியலுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவாரு. எத்தனையோ நிகழ்ச்சிகள், முதல்வரே கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் கூட ஆம்புலன்ஸ் வந்தால் ஒதுக்கி விட்டு தான் போவார். அதுதான் மரபு. அதுதான் அவசியம் கூட. அதைச் செய்ய இவரால் முடியவில்லை. இதை வைத்துக்கொண்டு ஒரு அரசியல் பேச நினைக்கிறாரே தவிர அதில் உண்மையாக எந்தவித நடவடிக்கையும் இல்லை'' என்றார்.