திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் திமுக மக்கள் செல்வாக்கை இழந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் தெரிவித்து வரும் கருத்துக் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, ''மாவட்ட ஆட்சியர் இருக்கிறார். இதுகுறித்து பதில் சொல்லாமல் அரசு சம்பந்தப்பட்ட பதில்கள் சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் சொல்ல வேண்டிய கட்டாயம். தொடர்ந்து பத்து தேர்தல்களில் தோல்வியை தழுவி மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவர் ஒரு கருத்தை சொல்லுகிறார். தேர்தல் நெருங்கி இருக்கிறது அதனால் வீட்டுக்குள்ளே முடங்கி இருந்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதற்காக ஏதோ போக வேண்டும் என்பதற்காக சுற்றுப்பயணம் போகிறார்.
நான் இன்றைக்கு சொல்கிறேன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் 2026 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவின் ஆட்சிதான் அமையும். மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக ஆட்சிப் பொறுப்பை ஏற்பார். அவர் நிர்ணயித்த 200 என்ற இலக்கை தாண்டி இமாலய வெற்றியை திமுக கூட்டணி பெறும். மக்களிடத்தில் நீங்கள் பாருங்கள் எந்த அளவிற்கு வீடு வாரியாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறோம். எந்த இடத்திலும் பொதுமக்கள் அரசின் மீது சிறுகுறைகள் கூடச் சொல்லவில்லை. அந்த அளவிற்கு முதலமைச்சர் மீது நம்பிக்கை வைத்து மக்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். கரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதியில் 57 விழுக்காடு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். கரூர் தொகுதியில் மட்டும் 69 விழுக்காடு சேர்ந்துள்ளார்கள். இதையெல்லாம் யாராவது கட்டாயப்படுத்தி சேர்க்க முடியுமா? செல் நம்பர் வேண்டும்; உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட வேண்டும்; வீட்டில் அனுமதிக்க வேண்டும் அப்படி இருந்தும் ஆர்வமாக சேர்கிறார்கள். எனவே வரக்கூடிய தேர்தல் களம் என்பது திமுகவின் ஆட்சிதான்'' என்றார்.