தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தில் ஈரோடு தொகுதி மக்களிடம் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுக கட்சி அலுவலகம் அமித்ஷா வீட்டில் இயங்குகிறது என்று துணை முதல்வர் உதயநிதி துறையூரில் பேசியிருக்கிறார். உதயநிதி அவர்களே, உங்களுக்குக் கண் தெரியவில்லையெனில், கண்ணாடி வாங்கித்தருகிறேன். ராயப்பேட்டையில் தான் அதிமுக அலுவலகம் இருக்கிறது. நீங்களும் உங்க அப்பாவும் திட்டம் போட்டீர்கள். அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்குவதற்குத் திட்டம் போட்டீர்கள். சில பேர் தூண்டுதலில் அடித்து நொறுக்கினார்கள். அதை வைத்து அலுவலகத்துக்கு சீல் வைத்தீர்கள். ஆனால், அந்த சீலை அதிமுக உடைத்தெறிந்தது.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கருணாநிதி காலத்தில் திமுக இரண்டாக உடைந்தது, கருணாநிதி ஒருபக்கம், வைகோ ஒருபக்கம். அப்போது அந்த கட்சியை கைப்பற்ற முயற்சித்தனர், அறிவாலயத்தை காப்பாற்றிக் கொடுத்த கட்சி அதிமுக அதை மறந்துவிடாதீர்கள். உங்களைப்போல எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் எண்ணம் அதிமுகவுக்கு இல்லை.
உதயநிதி எப்படி பதவிக்கு வந்தார்? கருணநிதி பேரன், ஸ்டாலின் மகன் என்பது தவிர என்ன உழைப்பு இருக்கிறது? கரூரில் 41 உயிர்களை இழந்துவிட்டோம். முதல்வர் இரவே வந்து பார்த்தார், சரி. உதயநிதி சுற்றுலாவில் இருந்து கரூர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் சுற்றுலா சென்றவர் இதுகுறித்து பேசலாமா? நாட்டை ஆளும் முதல்வர், துணை முதல்வர், பொறுப்புடன் செயல்பட வேண்டாமா? இதை விட்டுவிட்டு உல்லாசப் பயணம் போகும் உங்களுக்கு எங்களைப் பற்றி பேச அருகதை இல்லை.
எமர்ஜென்ஸி, மிசா என்றெல்லாம் ஸ்டாலின் பேசுகிறார். அவை எல்லாம் காங்கிரஸ் ஆட்சியில்தான் வந்தது. ஸ்டாலினே மிசாவில் கைது செய்யப்பட்டார், அப்படிப்பட்ட கட்சியோடு நீங்கள் கூட்டணி வைத்திருக்கிறீர்கள், நாங்கள் கூட்டணி வைத்தால் என்ன தப்பு? மரியாதைக்குரிய இந்திரா காந்தி அவர்கள் மதுரையில் கார் பயணத்தில் தாக்கப்பட்டு ரத்தம் வந்தபோது, உங்கள் அப்பா என்ன சொன்னார் என்று ரோஷமுள்ள காங்கிரஸ்காரர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். என்ன பேசினார் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட கூட்டணி, திமுக காங்கிரஸ் கூட்டணி.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஸ்டாலின் கருப்பு பலூன் விடுவார், ஆட்சிக்கு வந்தபின்னர் வெள்ளை குடை பிடிப்பார். .
பிரதமர் அவர்களை எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தீர்கள் ? உங்கள் மீது நடவடிக்கை பாயக்கூடாது என்பதற்காக நடித்த நாடகம் எல்லாம் வெளுத்துவிட்டது. உதயநிதி கேலோ இந்தியா விழாவுக்கு பிரதமரை அழைத்து நடத்தினார். அப்போது அவர் நல்ல பிஎம், அதேபோல் செஸ் ஒலிம்பியாட் நடத்த வரும்போது நல்ல பி.எம்.!
கலைவாணர் அரங்கில் மத்திய அரசு திட்டம் நடத்தியபோது நல்ல பிஎம், இப்போது தேர்தல் வந்தால் மட்டும் மோசமான பிஎம். ! இதுதான் திமுக வின் இரட்டை வேடம். அதிமுக அப்படியல்ல, ஒரே மாதிரி இருப்போம். யாரை மதிக்க வேண்டுமோ, மதிப்போம் தமிழ்நாட்டுக்காக குரல் கொடுப்போம். தமிழ்நாட்டுக்கு நன்மை கொடுத்தால் பாராட்டுவோம்!" என்றார்.