தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், மக்களை காப்பது தலைவரின் கடமை என்று விஜய்க்கு, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் செய்துள்ளார். ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, தருமபுரியில் நேற்று (02-10-25) பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஏற்கெனவே நான்கு கூட்டம் நடத்தி இருக்கீங்க, நான்கு கூட்டத்திலும் காவல்துறை பாதுகாப்பு இல்லை. அப்படி பாதுகாப்பு இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுகின்ற போது அந்த மக்களை காப்பது நமது கடமையாக இருக்க வேண்டும். அது தான் உண்மையான கட்சித் தலைவருக்கு அழகு. அதையும் நாம் கடைபிடிக்க வேண்டும். அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அந்த கட்சிக்கு வருகின்றவர்களை பாதுகாக்க வேண்டிய அந்த கட்சியினுடைய தலைவருடைய கடமை. நான் நடுநிலையாக பேசுகிறேன்.
ஒரு பொதுக்கூட்டத்தில் மக்கள் எப்படி வருவார்கள், அந்த மக்களுக்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று எல்லாமே திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஒரு கட்சியுடைய தலைவர் அதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆனால், இதில் அந்த சிக்கல் ஏற்பட்டுவிட்டது. அதை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொண்டு செயல்பட்டிருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். 53 ஆண்டு காலமாக அதிமுக பல ஆர்ப்பாட்டம், மாநாடு நடத்திருக்கிறோம். ஆனால், இப்படி எல்லாம் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. திமுக உள்ளிட்ட எந்த கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அதிமுக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், இன்றைக்கு இருக்கின்ற முதல்வர் அனுமதி கொடுப்பதில்லை. பொதுக்கூட்டம் நடத்த வேண்டுமென்றால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க வேண்டிய அவல நிலை தமிழகத்தில் இருக்கிறது. அப்படியே நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும், பாதுகாப்பு கொடுக்க இந்த அரசாங்கம் மறுக்கிறது. அதனால், இன்றைக்கு 41 உயிர்களை இழந்திருக்கிறோம்” எனப் பேசினார்.