அண்மைக் காலமாகவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “கட்சி ஒன்றுபட வேண்டும். வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும். ‘மறப்போம், மன்னிப்போம்’ என்று பிரிந்தவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது கோரிக்கையை பழனிசாமி ஏற்றால், அவரது பரப்புரையில் பங்கேற்பேன். பத்து நாட்களுக்குள் கட்சியில் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இல்லையெனில், ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்தார்.

Advertisment

இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திண்டுக்கலில் எடப்பாடி கே.பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டார். செங்கோட்டையன் பத்து நாட்கள் கெடு விதித்திருந்த நிலையில், அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்வராஜூக்கு செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்ட பதவிகள் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் செங்கோட்டையனை நேரில் சந்தித்த பிறகு புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், ''நீக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் தலைவராக இல்லை. தான்தோன்றித்தனமான ஒரு மனிதனாக எடப்பாடி பழனிசாமியை பார்க்கிறேன். உங்களை எப்போதாவது சுற்றுப்பயணத்திற்கு ரூட் போட்டு கொடுங்க என ஜெயலலிதா கூப்பிட்டதுண்டா?. செங்கோட்டையன் வாகனம் முன்னே செல்ல ஜெயலலிதா பின் தொடர்ந்து சென்றார். இதுதான் தமிழக முழுவதும் இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் சுற்றுப்பயணத்தில் செங்கோட்டையன் இல்லாமல் இல்லை. என்னையும் சரி செங்கோட்டையனையும் சரி ஜெயலலிதா செல்லப்பிள்ளைப் போல வைத்திருந்தார். இன்று அவரை கட்சியை விட்டு நீக்கி இருக்கிறீர்கள். மிக தெளிவாக செங்கோட்டையனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.

ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர். அப்படிப்பட்ட அவரையே நீக்கிவிட்டு அம்மாவாவது ஆட்டுக்குட்டியாவது என தூக்கி எறிந்து விட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி. சர்வாதிகாரத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து என்ன நியாயம் கிடைக்கும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு வித்திட்ட ஜெயலலிதா படமும் எம்ஜிஆர் படமும் இல்லை. அங்கே இருந்து தான் இந்த தகராறு தொடங்கியது. இவ்வளவையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்கிறாரே செங்கோட்டையன் என நான் வேதனைப்பட்டதுண்டு.  ஆனால் இன்று அவருடைய மனநிலையில் நினைத்துப் பாருங்கள். எவ்வளவு உழைத்திருக்க வேண்டும். ஏழுமுறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்'' என்றார்.