'Edappadi Palaniswami was not the one who established that relationship' - Interview with T.K.S. Ilangovan Photograph: (dmk)
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. நேற்று (30/01/2026) சென்னை கே.கே நகரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''காங்கிரஸ்க்கும் திமுகவிற்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் உடனடியாக கனிமொழி டெல்லிக்கு சென்று ராகுல் காந்தியை சந்திக்கிறார். சோனியா அம்மையாரை சந்திக்கிறார். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். திமுகவிற்கு அலுவலகம் டெல்லியில் தான் இருக்கிறது'' என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று டி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''திமுக-காங்கிரஸ் இடையே உறவை ஏற்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி இல்லை. நாங்க 20 வருஷமாக காங்கிரசுடன் உறவில் இருக்கிறோம். அதில் விரிசல் ஏற்பட்டு விட்டது என்று எடப்பாடி பழனிசாமி சொல்லக்கூடாது. எங்களுக்கு தெரியும். திமுக தலைமையும் காங்கிரஸ் தலைமையும் ஒன்றுபட்டு நிற்கிறது. இடையிலேயே சில கருத்துக்கள் அவரவர்கள் சொல்வார்கள். அது எங்களுக்கு பிரச்சனை இல்லை. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரோ அல்லது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரோ என்ன சொல்கிறார்களோ அதைத்தான் நாங்கள் செய்வோம். அதிக எண்ணிக்கையில் இடங்கள் கேட்பது எல்லோருக்கும் உள்ள உரிமை. அதையும் நாங்கள் அமர்ந்து பேசி சரி செய்து கொள்வோம். இது முதல் பேச்சு வார்த்தை அல்ல, காங்கிரசுக்கும் எங்களுக்கும், 10 கட்சிகளுக்கும் நடைபெறுகிற ஐந்தாவது, ஆறாவது பேச்சு வார்த்தையாக இருக்கும். இதை எப்படி அணுகுவது, எப்படி அவர்களை அரவணைப்பது என்பது எங்கள் தலைவருக்கு நன்றாக தெரியும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்பது வேறு, தனிப்பட்ட முறையில் இரண்டு பேர் தாக்கி கொள்கிறார்கள் தனிப்பட்ட முறையிலே ஒருவருக்கொருவர் மோதல் ஏற்படுகிறது என்பது எல்லா இடத்திலும் நடப்பதுதான். ஆனால் உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மணிப்பூரில் காவல்துறையின் பார்வையிலேயே நான்கு பெண்கள் எப்படி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டார்கள் என்று உங்களுக்கு தெரியும். மணிப்பூரிலே பாஜக ஆளும் மாநிலத்தில் அதை பற்றி அந்த அரசே கவலைப்படவில்லை. அப்படி ஏற்படுவதுதான் சட்டம் ஒழுங்கு பிரச்சனை. இங்கே தனிப்பட்ட முறையில் இரண்டு பேருக்குடையே வருகிற மோதல் அந்த மோதலிலே யார் பாதிக்கப்பட்டாலும் அந்த பாதிப்பை உண்டாக்கியவர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஒரு வழக்கில் கூட கைது நடவடிக்கை இல்லாமல் இல்லை. அதே நேரத்தில் இந்த எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் பொழுது அவருடைய தலைவியான ஜெயலலிதாவின் ஊட்டியில் உள்ள அந்த மாளிகையிலேயே போய் கொள்ளை அடித்து அந்த காவல்காரரை கொன்றார்கள். அவர் என்ன செய்தார்?'' என்றார்.
Follow Us