Edappadi Palaniswami walks out of the tamilnadu assembly
சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் (22-01-26) தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் பிரச்சனை குறித்து அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக உரை நிகழ்த்த வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. அந்த கோரிக்கைக்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று, “பேச வாய்ப்பு வேண்டும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சபாநாயகர் அதற்கு வாய்ப்பில்லை, இருந்தாலும் பதில் வந்ததற்கு பிறகு முடிவு செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். எனவே அந்த பிரச்சனை குறித்து நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருப்பது நேரம் தான் வீணாக சென்று கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்து பேசி பதில் தயாரித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நாளைய தினம் பதிலோடு உட்கார்ந்திருக்கும் நேரத்தில் பிரச்சனை எழுப்பினால் பதில் சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கும். எனவே இதை நாளைய தினம் எடுத்துக் கொண்டு அதற்குரிய பதிலை சம்பந்தப்பட்ட அமைச்சர் மூலமாக விளக்கிட வேண்டும் என்ற நிலையில் இதோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
ஆனாலும் அதை மறுத்த அதிமுக எம்.எல்.ஏக்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டு சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர், அவர்கள் சட்டமன்ற வளாகத்தில் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
அதனை தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்களோடு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ விவசாயகளின் முக்கிய பிரச்சனையை அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருவதற்கு பேரவைத் தலைவரிடம் அனுமதி கேட்டேன். ஆனால் அவர் தொடர்ந்து அனுமதி மறுத்துவிட்டார். கோவை திருப்பூர், நாமக்கல், ஈரோடும் விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை நடத்தி வருகிறார்கள். இதில் 40,000 விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதில் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இது முக்கிய தொழிலாக கருதப்படுகிறது. கறிக்கோழி விற்கும் நிறுவனங்கள், ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் தான், ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் இடம், கோழி பண்ணை செட்டு, தேங்காய் நார் மஞ்சு, மின்கட்டணம் இன்றைக்கு பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் இன்றைக்கு கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தொழிலாளர்களுடைய சம்பளமும் உயர்ந்துவிட்டது. இதனால் கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள், வளர்ப்பு வகை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் ஆறு மாத காலமாக அரசினுடைய கவனத்தை கொண்டு வருவதற்கு போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இதில் சுமார் 40,000 விவசாய குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகிருக்கிறார்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால் அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த கறிக்கோழி வாங்குகின்ற நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது.
இதை கவனத்திற்கு கொண்டு வந்தேன். இதை கூட பேசுவதற்கு இந்த அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எந்த அளவுக்கு சர்வாதிகார போக்கை இந்த அரசாங்கம் கடைபிடிக்கிறது என்று எங்களுக்கு புரிகிறது. இந்த அரசாங்கம் பொறுப்பேற்றதில் இருந்து கொசு ஒழிப்பில் அக்கறை செலுத்தவில்லை. இதனால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் சிக்கன் குனியா ஏற்பட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு முகாம்கள் நடத்தி அவர்கள் சிகிச்சைப் பெறுவதற்கான நடவடிக்கை இந்த அரசு எடுக்க வேண்டும். இதை பற்றி பேசுவதற்கும் அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்திருக்கிறோம்” என்று கூறினார்.
Follow Us