தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதே போல், எதிர்க்கட்சியான அதிமுக, மீண்டும் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட உள்ளது.
இது தவிர மற்ற கட்சியான தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதிதாகக் கட்சி ஆரம்பித்து இந்த தேர்தலில் முதல் முறையாகக் களமிறங்க உள்ளார். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கான களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்துத் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஐ.ஜி அஸ்ரா அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வெளியாகி இருந்தது. இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், “எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட சுற்றுப் பயணத் திட்டத்தில், 05.10.2025, 06.10.2025 ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப் பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதன்படி 08.10.2025 (புதன்கிழமை) நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செங்கோடு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 09.10.2025 (வியாழன்) அன்று நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். 10.10.2025 (வெள்ளி) அன்று அதிமுகவின் ஈரோடு மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மொடக்குறிச்சி, ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு பரப்புரை முறையை மாற்றி நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இன்று (08.10.2025) முதல் பரப்புரை பயணத்தைத் தொடங்க உள்ளார். அதாவது நீதிமன்ற உத்தரவின்படி நெடுஞ்சாலை பகுதிக்குப் பதிலாகத் தனியார் இடத்தில் பரப்புரை மேற்கொள்ள காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட தனியார் இடங்களில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்காக இந்த இடத்தின் உரிமையாளரின் ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும். பிரச்சார கூட்டங்களில் எவ்வளவு பேர் பங்கேற்கிறார்கள் என்ற விவரங்களை வழங்க வேண்டும். கூட்டத்தில் பங்கேற்போருக்கு போதிய அளவு தேவையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளைச் செய்து தர வேண்டும். அதே சமயம் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்யக்கூடாது. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/08/eps-rally-1-2025-10-08-07-27-27.jpg)