Edappadi Palaniswami spoke at public meeting of the 54th anniversary of the inauguration of AIADMK
அதிமுகவின் 54-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் இன்று (08-11-25) மாலை நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “பொதுமக்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் விழிப்போடு இருந்து, தங்கள் வாக்குகளை வாக்காளர் பட்டியலில் பதிவுசெய்ய வேண்டும். திமுகவினர் திட்டமிட்டு அதிமுக வாக்காளர்களை இடம் பெறாமல் செய்துவிடுவார்கள். ஒவ்வொரு பூத்துக்கும் அதிகாரிகள் வருவார்கள், படிவம் வாங்கி முறையாக பதிவுசெய்து ஒப்படையுங்கள். எஸ்.ஐ.ஆரை திமுக கூட்டணி எதிர்க்கிறது. ஏனெனில் நகராட்சி, மாநகராட்சியில் கள்ள ஓட்டுப்போட்டுதான் ஜெயித்தனர். இறந்தவர்கள் எல்லாம் தேர்தலின்போது வந்துவிடுவார்கள். அவற்றை எல்லாம் நீக்குவதற்கு எஸ்.ஐ.ஆர் மிக முக்கியம்.
போலி வாக்காளர்களை நீக்கி தகுதி வாய்ந்தவர்களை வாக்காளர் ஆக்குவதுதான் இதன் சாராம்சம். இதை ஏன் எதிர்க்கிறீர்கள்? ஆளும் கட்சி திமுக அரசு அதிகாரிகள் தான் வருகிறார்கள். இதை எதிர்ப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி ஒருபக்கம் எதிர்த்து, ஒருபக்கம் வீடு வீடாக வந்து படிவத்தை கொடுக்கிறார்கள். அப்படி பி.எல்.ஏ-2 படிவத்தை கொடுக்க கூடாது. தேர்தல் ஆணைய அதிகாரி தான் கொடுக்க வேண்டும். இது முக்கியம். அதை முறையாகப் பார்க்கவேண்டும். இல்லையெனில் திமுகவினர் தில்லுமுல்லு செய்வார்கள். டெல்டாவில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை, நெல் மணிகள் முளைத்துவிட்டது. நான் நேரடியாக சென்று பார்த்தேன். விவசாயிகள் கண்ணீர் விட்டனர். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தல் 2026 தேர்தல்.
ஸ்டாலின் அவர்களே, ஆட்சி வேண்டுமானால் நீங்கள் செய்யலாம், சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகதான் ஆட்சி செய்கிறது. சேலம் அதிமுக எஃகு கோட்டை. 2011ல் 100க்கு 100% வென்றோம், 2016ல் வென்றோம், 2021ல் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை வென்றோம். தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் வென்ற ஒரே மாவட்டம் சேலம் மாவட்டம். உள்ளாட்சியில் பணி நியமனம். பணியாணை வழங்குவதில் ஊழல். இதை இன்று வரை மறுக்கவில்லை. அந்த அமைச்சர் நேரு, டெல்டா இதை இன்று வரை மறுக்கவில்லை. அமைச்சர் நேரு, ‘என்னைத்தான் குற்றம் சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள்’ என்கிறார். ஆம் தவறு செய்தால் குற்றம் சொல்லத்தான் செய்வார்கள், நிரபராதி என்று நிரூபியுங்கள்.
நான்கு அதிகார மையங்கள் தமிழகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் ஒரு கருத்தைச் சொன்னார். அந்த ஆடியோ எல்லா மீடியாவிலும் வந்தது. இதுவரை ஸ்டாலின் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. சபரீசனும், உதயநிதி ஸ்டாலினும் சுமார் 30 ஆயிரம் கோடியை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள் என்று சொன்னார். ஆக கொள்ளையடிப்பது தான் அவர்களுடைய குறிக்கோள். ஒரு அமைச்சரே சொல்கிறார் என்று சொன்னால் அது உண்மைதானே?” என்றார்.
Follow Us