சட்டமன்றத் தேர்தலையொட்டி, ஈரோடு பவானிசாகரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (15-02-26) தேர்தல் சுற்றுப்பயணம் தொடங்கினார். அப்போது மக்களிடம் பேசிய அவர், “எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. தில்லு திராணி இருந்தால் எங்கள் ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டுங்கள், பதில் சொல்கிறோம். அதில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் பாஜகவுக்கு அடிமை, ஊர்ந்து போய் பதவி வாங்கினார் என்று பேசுவதைத் தவிர்த்து பொம்மை முதல்வருக்கு ஒன்றும் தெரியாது. ஸ்டாலினும் நீங்களும் ஒரே மேடையில் விவாதத்திற்கு முன்வருவீர்களா என்று கேட்டார்கள். நான் தயார் என்று சொன்னேன். நான் வருகிறேன், அதிமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்கிறேன். நீங்களும் சொல்லுங்கள் என்றேன். இதுவரை பதிலே இல்லை. 

Advertisment

இபிஎஸ் கடையை திறந்து வைத்து கூவி அழைக்கிறார், யாரும் வரவில்லை என்று இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்டாலின் சொன்னார். கூட்டணி தானாக அமைய வேண்டும். கனி தானாக பழுக்க வேண்டும். அப்போது தான் சுவை. இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துவிட்டது, வலிமையான கூட்டணி. ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது. தினமும் திமுக- காங்கிரஸ் வார்த்தைப் போர் நடக்கிறது. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருக்குமா என்பது சந்தேகம். ஆட்சியில் பங்கு வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். இப்போது கூட உரிய மரியாதை கிடைக்காவிட்டால் தகுந்த பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி சொல்கிறார். கூட்டணி நிலைக்குமா தெரியவில்லை. இன்னொரு பக்கம் திருமாவளவன், ஆட்சியில் பங்கு கேட்கிறார், கூட்டணியில் குழப்பம். அதிமுக கூட்டணி வலிமையானது. பிரதமர் மதுராந்தகம் வந்து பிரசாரம் செய்தார், எங்கள் தேர்தல் பிரசாரம் துவங்கிவிட்டது. அதிமுக தான் 181 இடத்தில் எழுச்சிப் பயணம் முடித்து 182-வது தொகுதியில் பேசுகிறேன். இதுவரை எந்த கட்சியும் இப்படி செய்ததில்லை. நேரடியாக மக்களை சந்திப்பதில் முதல் இடத்தில் இருப்பது அதிமுக கூட்டணி.

Advertisment

அதிமுக ஆட்சியில் பாலியல் வன்கொடுமை நடந்ததாக முதல்வர் பேசுகிறார், உங்கள் ஆட்சியில் 6,999 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார்கள். 6999 சிறுமிகளும் அப்பா என்று கதறுவது உங்கள் காதில் விழவில்லையா? மோசமான ஆட்சி இது. பெண்களுக்கு பாதுகாப்பில்லை, பாட்டிக்கும் பாதுகாப்பில்லை. இதைக் கட்டுப்படுத்த சட்டம் ஒழுங்கு நிரந்தர டிஜிபி இதுவரை நியமிக்கவில்லை. 3 மாதம் முன்பே யுபிஎஸ்சிக்கு அனுப்பி மூவரை பரிந்துரைக்கும் பட்டியலிலிருந்து, ஒருவரை நியமிக்க வேண்டும். ஏற்கனவே மூவரை அனுப்பியது யுபிஎஸ்சி, ஆனால் தமிழக அரசு நியமிக்கவில்லை. நீதிமன்றம் சென்றுவிட்டது. இப்படிப்பட்ட முதல்வர் தான் நம்மை ஆள்கிறார். காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. உதயநிதி அவ்வப்போது அதிமுக பற்றி அவதூறு பரப்புகிறார். இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் இதுதான் துணை முதல்வர் உலகம். பகலில் நாட்டு மக்களை பார்க்காதவர், இன்ஸ்டாவில் நள்ளிரவில் லைக் போடுகிறார். இப்படிப்பட்ட துணை முதல்வர் தேவையா..? ஸ்டாலினின் 5 ஆண்டு சாதனை 1000 ஆண்டு வரலாறு பேசுமாம், உண்மைதான். ஆனால் என்ன பேசுவாங்க..? 5 ஆண்டு ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடனாளியாக்கிவிட்டார் என்பதைத்தான் பேசுவார்கள். அந்த கடனை நாம் தான் கட்டணும். வரி போட்டுத் தான் அடைக்கணும். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய், ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகால கடன் சுமை அதிகம், 5 லட்சம் கோடி. இதைத்தான் பேசுவார்கள்.

கனிமவளக் கொள்ளை குறித்து எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. எம்.எல்.ஏ. ஆட்கள் 3000 லோடு எடுப்பது அதிகாரிகளுக்கும் தெரியும். 2 நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கரே நேரில் சென்று தடுத்து நிறுத்தினார். அதிமுக ஆட்சி அமைந்ததும், இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மணல் திருட்டுக்கு காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பது எந்த வகையில் நியாயம். முதல்கட்ட தேர்தல் அறிவிப்பு, மகளிருக்கு குலவிளக்கு திட்டம் மூலம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கும் கட்டணமில்லா நகர பேருந்து, ஏழைகள் அனைவருக்குமே வீடு கட்டித் தரப்படும். பட்டியலின மக்கள் தனிக்குடித்தனம் போனால் வீடுகட்டித் தரப்படும். அம்மா இருசக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு கொடுக்கப்படும். 25 ஆயிரம் ரூபாய் மானியம் கொடுக்கப்படும். மாணவர் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

Advertisment

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3 சிலிண்டர் வழங்கப்படும். ஜல்லிக்கட்டில் உயிர் இழந்தால் குடும்பத்துக்கு 10 லட்சம், படுகாயம் அடைந்தால் 2 லட்சம். வீரர்களுக்கு இன்சூரன்ஸ், பதிவுசெய்யப்பட்ட காளைகளுக்கு இன்சூரன்ஸ். சிறுபான்மை மகளிருக்கு வட்டியில்லா கடன். மாற்றுத்திறனாளி கூட்டுறவு கடன் தள்ளுபடி. நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்கி இருந்தால் தள்ளுபடி செய்யப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு கூட முறையாக நடத்தப்படவில்லை. இதுவரை வரலாற்றில் தேர்வு ரத்து செய்யப்பட்டது கிடையாது. அப்படி, ரத்து செய்த ஒரே அரசு திமுக அரசு” என்று குற்றம்சாட்டி பேசினார்.