சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் எம்.எல்.ஏ திட்ட நிதியில் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்ட பல்வேறு பணிகளை தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (22-12-25) தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்ற விதமாக பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5,000 கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றி அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. இது வரைக்கும் அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆனால் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக உயர்த்தி இருக்கிறது. அதை திமுகவுக்கு பாராட்ட மனம் இல்லை.

Advertisment

ஆனால், அந்த திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த திட்டத்தால் மாநில அரசுக்கு நிதிசுமை அதிகமாகும் என்று சொல்கிறார்கள். அதை திமுகவினர் நாடாளுமன்றத்தில் தான் வாதாட வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டியது அங்கு தான் விவாதிக்கப்பட வேண்டும். அதற்கு தானே திமுக கூட்டணிக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர்கள் முழுமையான அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டுமென்றால், நாடாளுமன்றத்தில் தான் பேச வேண்டும். சும்மா வெற்று அறிக்கை விட்டுட்டு மழுப்பலான பதிலை கொடுத்து மக்களை ஏமாற்றக் கூடாது.

Advertisment

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் இருக்கின்ற பொருளாதார சூழலை கருதி கடன் வாங்குவது குறித்து குழு அமைப்பதாக தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். நிதி மேலாண்மை குழுவை அமைத்து நிபுணர் குழுவை போட்டார்கள். அதற்கு பிறகு தான் தமிழகத்தில் கடன் அதிகமாகி இருக்கிறது. இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்த அரசின் முதல் சாதனை இது தான். இன்றைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.