சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (14-07-25) திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அதிமுக - பா.ஜ.க கூட்டணி குறித்து தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணியைப் பற்றி பேசுவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு என்ன இருக்கிறது? எங்கள் கூட்டணி வலுவாக இருக்கிறதா? குறைவாக இருக்கிறதா? என்பதை மக்கள் தான் பார்க்க வேண்டும். அவர் எங்களுக்கு கணிப்பு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் ஜோசியக்காரரும் இல்லை. அவருடைய கூட்டணியை அவர் காப்பாற்றினால் போதும். அவர் கூட்டணியில் தான் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளிவந்தே இருக்கிறது. அவர் அதை சரி செய்தால் போதும். அதிமுகவை பொறுத்தவரைக்கும் எங்கள் கூட்டணி ஒற்றுமையாக, வலுவாக இருக்கிறது. 2026இல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். அதிமுக தனித்து ஆட்சியமைக்கும்.

எனது சுற்றுப்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்து வருகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவெடுத்து விட்டார்கள். போகும் இடமெல்லாம் திமுக ஆட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் கூறுகின்றனர். எங்களுடைய சுற்றுப்பயணத்தில், அந்த எழுச்சி மக்களிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. அனைத்து துறையிலும் ஊழல் படிந்துவிட்டது. இந்த ஆட்சி இருக்கக் கூடாது என்று மக்கள் கொந்தளிப்போடு இருக்கின்றனர் என்பதை எங்களுடைய சுற்றுப்பயணத்தின் போது அவர்களின் ஆரவாரத்தில் தெளிவாக தெரிகிறது.

உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் வேடிக்கையாக இருக்கிறது. டுத்த ஆண்டு நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்காக விளம்பரம் செய்து மக்களை கவர்வதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். நான்கரை ஆண்டு காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகளை அவர் ஏன் செய்யவில்லை?. 4 ஆண்டுகள் ஒன்றுமே செய்யாமல் இப்போது குறைகளை கேட்கிறார்கள். அரசு அதிகாரிகள் மூலம் மக்களிடம் செல்போன் எண்களை பெற்று அதை திமுக ஐடி விங்க்-க்கு கொடுத்து அவர்களுடன் உரையாடுவதற்காக இந்த திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார்கள். எங்களுடன் இன்னும் பல கட்சிகள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவை அனைத்து பலம் பொருந்திய கட்சிகள். அதிமுக தலைமையில் அமைக்கும் கூட்டணி வலுவான மற்றும் வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று கூறினார்.