அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" - என தமிழகத்தின் 234 தொகுதிகளில் மக்களின் ஆதரவைத் திரட்டும் வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், 110வது தொகுதியாக இன்று (23.08.2025) திருவெறும்பூர் தொகுதியில் தனது சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திமுகவின் 57 மாத ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு ஏதும் நன்மை செய்துள்ளார்களா?.
கடந்த 2021ஆம் ஆண்டு திமுக தேர்தல் 525 அறிக்கையில் 10 சதவிகிதம் கூட நிறைவேற்றாமல் 98 சதவிகிதம் நிறைவேற்றியதாக பச்சைப் பொய்யைக் கூறி வருகிறது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை திமுக அறிவித்து கொள்ளை புறத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது. ஏழை எளிய தொழிலாளர்கள் நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் அரிசி, பருப்பு, உளுந்து, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அதிமுக ஆட்சி காலத்தில் விற்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் விண்ணை முட்டுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையிலும் வெளி மாநிலங்களில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி அவற்றை குறைவான விலைக்கு மக்களைப் பாதிக்காத வகையிலும் வழங்குவதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி வைத்திருந்ததோடு மக்களை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்தது.
திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் எனக் கூறியது. அமைச்சர் நேரு, எம்ஜிஆருக்கு பெண்களிடத்தில் அதிக செல்வாக்கு இருந்தது. தற்பொழுது திமுகவிற்கு உள்ளதாக நேரு கூறினார். எம்ஜிஆருக்கு என தனி அடையாளம் உண்டு. அவருக்கு இணை எவருமே இல்லை. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ.க்கள் அழுத்தம் தந்ததால் தான் திமுக அரசு வேறு வழியின்றி உரிமைத் தொகை வழங்கியது. இதனைப் பெற்றுத் தந்தது அதிமுக தான். பக்கத்து மாநிலமான கர்நாடகவில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 2 மாதங்களிலேயே தனது வாக்குறுதியை நிறைவேற்றியது. திமுக பதவிக்கு வருவதற்காக எது வேண்டுமானாலும் பேசும். ஆனால் வந்த பிறகு அதை செய்யாது. தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் விதிகளை தளர்த்தி மேலும் 30 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
மக்கள் படும் கஷ்டத்திற்காக கொடுக்கவில்லை, தேர்தலை கருத்தில் கொண்டு அவர்கள் வழங்குகின்றனர். திமுக செல்வாக்கை இழந்து வருகிறது. வரும் தேர்தலில் திமுக தோற்பது உறுதி. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. டிஜிபி அறிவிப்பதில் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. டிஜிபி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பு மூன்று பேரை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்ப வேண்டும். அதில் ஒருவரை மத்திய அரசு நியமிக்கும். ஆனால், இந்த மாதம் 30 ஆம் தேதி டிஜிபி ஓய்வு பெற உள்ள நிலையில் இதுவரை மாநில அரசு யாரையும் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. ஏதோ கோளாறு உள்ளது. இதற்கு என்ன காரணம் என்று அரசு விளக்க வேண்டும். சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.
தமிழக முதல்வர் போதை பொருளை கட்டுப்படுத்தி விட்டதாக கூறுகிறார். ஆனால் தினமும் செய்தித்தாள்களில் போதை பொருட்கள் பிடிபட்ட வழக்குகள் பற்றிய செய்திகள் வருகிறது. திமுக ஆட்சி ஏற்ற ஒரு ஆண்டுகளையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது குறித்து அப்போதே அதிமுக எச்சரித்தது. தமிழகத்தில் மாணவர்கள், பொதுமக்களில் பலரும் போதைப் பொருட்களில் சிக்கிச் சீரழிந்து வருகிறார்கள். நிலைமை கைமீறிப் போன நிலையில் உதயநிதி தலைமையில் உறுதிமொழி எடுக்கிறார்களாம். திமுக ஆட்சியில் முதியோர், காவல்துறை அதிகாரிகள், பெண்கள், மாணவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அதனை சரி செய்யும். சிறுமி முதல் பெரியவர் வரை பாதுகாப்பு இல்லை, காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை, திருப்பூர் மாவட்டத்தில் அண்ணன் தம்பி இடப் பிரச்சனை விசாரிக்க சென்ற எஸ்ஐ வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இப்படி இருந்தால் தமிழகத்தை பாதுகாக்க ராணுவத்தை தான் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் ஆறு மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். செயல்படாத அரசாக திமுக உள்ளது. அதிமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை மேம்பட்டு விளங்கியது. ஆரம்பப் பள்ளி நடுநிலைப்பள்ளியாகவும், நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளியாகவும் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திமுக ஆட்சி காலத்தில் அதிக அளவில் மேல்நிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டதாக சட்டமன்றத்தில் கூறுகிறார். தற்போதைய அரசு அரசாங்கத்திற்காக மக்களை பயன்படுத்துகிறது. அதிமுக அரசு மக்களுக்கான அரசாக செயல்பட்டது.
2026 சட்டமன்ற தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். இங்கிருக்கும் அமைச்சர் துணை முதல்வருக்கு ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். அமைச்சரான பிறகு அதில் தான் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து செயல்பட வேண்டும். திமுக ஆட்சி ஏற்ற பிறகு 67 சதவீதம் மின்கட்டணம் உயர்ந்துள்ளது. இங்கிருக்கும் சிறுகுறு தொழில் செய்யும் கம்பெனிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வீடு கடைகளுக்கு என மின் கட்டணம் தனித்தனியாக உள்ளது. அதேபோல் மாநகராட்சிகளை சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தியுள்ளது. கடைகளுக்கு 150 சதவீதம் உயர்த்தியுள்ளது குப்பைக்கு வரி போடும் அரசாக திமுக அரசு உள்ளது குப்பையை கூட விட்டு வைக்கவில்லை அவர்கள். இப்படிப்பட்ட அரசு தொடரக்கூடாது. இந்தியாவின் சூப்பர் முதல்வர் என தமிழக முதல்வர் நான் தான் எனக் கூறி வருகிறார். கடன் வாங்குவதில் தான் அவர் சூப்பர் முதல்வர். நாலு ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளார்.
இன்னும் ஓராண்டு உள்ளது. அதில் ஒரு லட்சம் கோடி கடன் வாங்கி விடுவார். ஓட்டு போட்ட தமிழக மக்களுக்கு கொடுத்த பரிசு. அரசு வாங்கும் கடன்கள் பொதுமக்கள் தலையில்தான் வரியாக விடியும். 72 ஆண்டு ஆட்சியில் இருந்தவர்கள் வாங்கிய கடனை விட நான்கு ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த அவர்கள் வாங்கிய கடன் 100 சதவீதம் அதிகம். திமுக அரசு பதவி ஏற்ற உடன் தமிழகத்தில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்தது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இதுவரை 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளார்கள் என கூறியுள்ளனர். இதனால் நாலரை லட்சம் பேர் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில் இந்த நான்கு ஆண்டுகளில் 75 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இன்னும் ஐந்தரை லட்சம் காலி இடங்கள் உள்ளது.
இப்படி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதிமுக ஆட்சி வந்ததும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். மேலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தேவையான உதவிகள் செய்யப்படும். சென்னையில் நேற்று பெய்த மழையில் மின் கம்பி அருந்து விழுந்து வரலட்சுமி என்ற பெண் இறந்துள்ளார். நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் டெல்டா மாவட்டங்கள் ஆகும். இந்த பகுதியில் மீத்தேன் எடுப்பதற்கு கையெழுத்து போட்டவர் மு.க.ஸ்டாலின். அதிமுக ஆட்சி வந்ததும், டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டது. காவிரி நதி நீர் பிரச்சனையை டெல்டா மாவட்டங்கள் முழுமையாக நம்பி உள்ளதா என சட்டபூர்வ போராட்டம் நடத்தி அதனை பெற்றுத் தந்தது ஜெயலலிதா.
இந்த காவிரி நீர் மூலம் 20 மாவட்ட மக்கள் குடிநீர் வசதி பெற்று வருகின்றனர் அவர்களையும் பாதுகாத்து வருகிறது மக்கள் துன்பத்தை விரும்பாத அரசாக அதிமுக அரசு இருந்தது கிராமப்புறம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பல லட்சம் கோடி மதிப்பீட்டில் வீடு கட்டி தரப்படும், தீபாவளி பெண்களுக்கு சேலை வழங்கப்படும். திருமண உதவித்தொகை மீண்டும் வழங்கப்படுவதற்கு தாலிக்கு தங்கமும் வழங்கப்படும். மேலும், மணப்பெண்ணுக்கும் மனமகனுக்கும் பட்டு சேலை பட்டு வேஷ்டி வழங்கப்படும்” எனப் பேசினார். முன்னதாக, இந்த கூட்டத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் தலைமை வகித்தார். முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செம்மலை, தங்கமணி, பரஞ்சோதி, கோகுல இந்திரா, வளர்மதி உட்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள் பாண்டியன், கணபதி, சன்னாசி, விஜயராணி, மரியலூசியா உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் வரவேற்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.