கூட்டணி ஆட்சியா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் அதிமுக - பா.ஜ.க இடையே அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த ஜூன் 27 ஆம் தேதி தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொடுத்த பேட்டியில் ‘தமிழகத்தில் ஜனநாயகக் கூட்டணி மிகவும் வலுவான கூட்டணியாக இருக்கிறது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு பாஜகவின் பங்கு மிகவும் பிரதானமானதாக இருக்கும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் அதிமுகவிலிருந்து தான் வருவார். தமிழ்நாட்டுக்கு தாங்கள் ஏற்கனவே நிறைய சிறப்பு நிதிகளை வழங்கி இருக்கிறோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமைந்தால் நிச்சயமாக எங்களுடைய பொறுப்புகள் இன்னும் அதிகரிக்கும்’ என தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். அமித்ஷா கூறியதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, ‘கூட்டணி ஆட்சி’ என அமித் ஷா கூறவில்லை என்றுமழுப்பலாக பதில் அளித்தார்.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா மீண்டும் பேசி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ள அமித்ஷா, ‘அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. பீகார்  சட்டமன்றத் தேர்தலிலும் என்டிஏ கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்’ எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், அமித் ஷா கூறியது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் இன்று (12-07-25) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “பெரும்பான்மையுடன் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.