Edappadi Palaniswami questioned How will law and order improve without appointing a DGP?
சேலம் விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (21-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்றைக்கு தமிழ்நாடு அரசு மெத்தன போக்காக இருக்கின்றது. மேகதாதுவில் ஏதாவது அணை கட்டப்பட்டுவிட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனம் ஆகிவிடும். தமிழகத்தில் ஜீவநதியாக இருப்பது காவிரி நதிநீர். அந்த காவிரி நதிநீரை நம்பித்தான் பல லட்ச விவசாயிகள் வேளாண் பணியை மேற்கொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் இருக்கின்ற 20 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி தண்ணீர். அப்படி இருக்கும் போது அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி கர்நாடக அரசு ஒரு தெளிவான திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் சமர்ப்பிப்போம் என்று தெரிவித்திருக்கின்றார்கள். உடனடியாக தமிழ்நாடு அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேகதாது அணை கட்டுவதற்கு எவ்வித உரிமையும் கர்நாடக அரசுக்கு தற்போது இல்லை. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 15 ஆண்டுகளுக்கு காவரி நதிநீர் தடுக்கவோ, திருப்பவோ, மடைமாற்றம் செய்யவோ கூடாது என்றும் ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும், கிட்டத்தட்ட ஆண்டுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாடுக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுக்கிட்டது. அந்த தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு இன்றைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது குறித்து முதலமைச்சர் எந்த விளக்கமும் அளிக்காமல் இருப்பது வருத்தமளிக்கின்றது. அதோடு இன்றைக்கு திமுக, இந்தியா கூட்டணியோடு கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தமிழக முதல்வர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் தலைவர் சோனியா காந்தியிடமும், மக்களவை தலைவர் ராகுல் காந்தியிடமும் பேசி ஒரு சுமூகமான நிலையை உருவாக்கப்பட வேண்டும். அப்படி தீர்வு காணப்படாமல் இருந்தால் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிடும்.
கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்பு, திமுக கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். 2024ஆம் ஆண்டுதான் மத்திய அரசுக்கு ஒரு விரிவான திட்ட அறிக்கையை அனுப்பி வைத்தார்கள். அந்த விரிவான திட்ட அறிக்கையில் பல குறைபாடுகள் இருந்த காரணத்தினாலே அதை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது. அதற்கு பிறகும் அவர்கள் முழுமையான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கீட்டின் படி தமிழ்நாடு அரசு மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு விரிவான திட்ட அறிக்கை யை தயாரித்திருக்கிறது. மெட்ரோ ரயில் திட்ட பணி ஒரு மாநகரத்துக்கு வர வேண்டும் என்றால், சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாநகரமாக இருக்க வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,84,000 பேர் இருப்பதாக, விரிவான திட்ட அறிக்கையிலே யே குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதனால் இந்த திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் குளறுபடி ஏற்பட்டுவிட்டது.
இந்த ஆண்டில் மக்கள் தொகை எவ்வளவு இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தால் அவர்கள் நிர்ணயித்த அந்த 20 லட்சம் மக்கள் தொகை கிடைத்திருக்கும் நம்முடைய திட்டம் நிறைவேற்றிருக்கிறோம். மீண்டும் இந்த அரசு விழிப்போடு இருந்து குளறுபடி இல்லாமல் மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்ட அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு விரிவான திட்டறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும். தமிழக அரசு, நிரந்திர டிஜிபியை இன்றுவரை நியமிக்கவில்லை. அதனால், சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. ஒரு நிரந்தர டிஜிபி இல்லாத போது எப்படி சட்ட ஒழுங்கு சரியாக இருக்கும்?. சரியாக பராமரிக்கப்படும்?. இனியும் காலம் தாமதம் செய்யாமல் ஒரு நிரந்தர டிஜிபியை நியமித்து தமிழகத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வாரமும் நாள்தோறும் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குழைகின்ற காட்சியை பார்த்திருக்கிறோம். ஆங்காங்கே பாலியல் வன் கொடுமைகள், திருட்டு, கொலை கொள்ளை நடந்த வண்ணம் இருக்கின்றது. இந்த அரச கும்பகர்ணன் போல் தூங்கி கொண்டிருக்கிறது” என்று காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
Follow Us