சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக் கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் பேசிய இபிஎஸ், “அதிமுகவில் இன்று இணைந்துள்ள அத்தனை பேரும் இக்கட்சியை உங்கள் கட்சியென்று எண்ணி செயல்பட வேண்டும். 2011 முதல் 2021 வரை சேலம் மாவட்டம் பல்வேறு துறைகளில் எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதிமுக ஆட்சியில் சேலம் முழுவதும் தரமான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளும் குளங்களும் தூர்வாரப்பட்டன. விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கினோம். விவசாயிகளின் கடன்களை இரு முறை தள்ளுபடி செய்தோம். சேலம் மாவட்டம் கைத்தறி, விசைத்தறி நிறைந்த பகுதி. இந்த இரு தொழில்களும் அதிமுக ஆட்சியில் சிறப்பாக இருந்தன. இன்றைய நிலையில் அவை நலிவடைந்துள்ளன. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால், நெசவாளர்களும் விசைத்தறி உரிமையாளர்களும் சிறப்பாகத் தொழில் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுப்போம்.

நம் பகுதியில் மரம் ஏறும் தொழிலாளர்கள் நிறைய உள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, மரம் ஏறும்போது தவறி விழும் விபத்துகளுக்கு நிதி நிவாரணம் வழங்கும் காப்பீட்டுத் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வருவோம். அதற்கான பிரீமியத்தை அரசே செலுத்தும். இதன்மூலம் அவர்களுக்கு பணி பாதுகாப்பு கிடைக்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அரசே வழங்கும். இப்பகுதி விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. அதனால், மேட்டூரில் இருந்து வெளியேறும் நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இங்குள்ள பல ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. அடுத்த ஆண்டு அதிமுக ஆட்சி மலரும். அப்படி அமைந்தால், நூறு ஏரி திட்டப் பணிகள் வேகமாக நடைபெறும். எதிர்காலத்தில் கூரை வீடுகளில் வசிக்கும் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்,” என்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், எம்.ஜி.ஆர். குறித்து திருமாவளவன் பேசியது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எம்ஜிஆரை தமிழக மக்கள் தெய்வமாக நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட எம்ஜிஆரை விமர்சனம் செய்தால், திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார். அதிமுக ஜாதிக்கும், மதத்துக்கும் அப்பாற்பட்ட இயக்கம். எம்ஜிஆர் காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், இப்போதும் ஜாதிக்கும் மதத்துக்கும் அப்பாற்பட்ட கட்சியாகவே அதிமுக உள்ளது. அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் ஒற்றுமையாக உள்ளோம். இது, சிலருக்குப் பொறுக்கவில்லை; எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அவர்கள் அரசியலில் நினைத்தது நடக்கவில்லை. அந்த வெறுப்பு காரணமாகவே இப்படி வார்த்தைகளைக் கக்கியிருக்கிறார்,” என்றார்.

இதையடுத்து, திமுக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, “திமுக கூட்டணி இன்னும் எட்டு மாதங்களுக்கு நிலைக்குமா, நிலைக்காதா என்பது தெரியவில்லை. ஏனென்றால், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியாக அதிமுக அமையும்,” என்றார்.பாமக பொதுக்குழு பற்றி கேட்கப்பட்டபோது, “பாமக விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அக்கட்சியின் பிரச்சினை குறித்து கருத்து சொல்ல மாட்டோம்,” என்றார்.