தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (31-12-25) அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அதிமுக கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எஸ்.ஐ.ஆர் பணிகளை கண்காணிக்க வேண்டும் எனவும், அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒன்று கூட விடபடக்கூடாது எனவும், திமுக அரசு செய்யும் தவறுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எனவும் மாவட்டச் செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், ‘மக்களை சந்தியுங்கள், கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.