தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில், அதிமுக- பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க இடம்பெறுவதாக நேற்று (07-01-26) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி கூட்டணியை உறுதி செய்தார்.

Advertisment

பா.ம.கவுடன் கூட்டணி அமைத்தப் பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திடீரென டெல்லி சென்றார். கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் மத்திய அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதோடு திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை அமித்ஷாவிடம் அவர் கொடுத்ததாகவும் தகவல் வெளியானது. அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததை தொடர்ந்து, இந்த ஆலோசனை நடைபெற்றது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அமித் ஷாவை சந்தித்த பின் டெல்லியில் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “உள்துறை அமைச்சர் அமித் ஷா அவரது இல்லத்தில் நேற்று இரவு சந்தித்தேன். தமிழ்நாட்டினுடைய அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அதிமுக, பா.ம.க தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறது. இந்த கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. மிக வலுவான கூட்டணி அமைக்கப்படும். சட்டமன்றத் தேர்தலில், திமுகவை வீழ்த்தி எங்களுடைய கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

Advertisment

ஸ்டாலின் அண்மையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். அரசு ஊழியர்களை ஏமாற்ற ஒரு நாடகமாகவே பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்தார்கள். அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் அரசு ஒரு நாடகத்தை நடத்திருக்கிறது. மத்திய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தின் வடிவத்தில் தான் இப்போது திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதில் எந்த வேறுபாடும் இல்லை, பெயரை மட்டும் மாற்றி அமைத்திருக்கிறார்கள். இந்த ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஆட்சி முடிந்த பிறகு சுமார் ரூ.5.5 லட்சம் கோடி கடனில் விட்டுப்போக போகிறார்கள். 2021 வரை ரூ.5.18 ஆயிரம் கோடி தான் தமிழ்நாட்டின் கடனாக இருந்தது. இப்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு ரூ. 5.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது.  இந்த ஆட்சியில் போதை நடமாட்டம் அதிகமாகியுள்ளது. எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமை தான். யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தமிழ்நாடு பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.

அமித் ஷாவிடம் கூட்டணி நிலவரம் குறித்து பேசவில்லை. தமிழ்நாட்டில் நிலவுகிற அரசியல் நிலவரம் குறித்து தான் பேசினோம். அண்மையில், அவர் புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். அப்போது எனக்கு வேறு நிகழ்ச்சிகள் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. அதனால் இப்போது சந்தித்து அரசியல் சூழலை கேட்டறிந்தார். கூட்டணியில் எந்த கட்சிகள் இணையும் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பா.ம.க போல் இன்னும் சில கட்சிகள் சேரும். அப்போது நாங்கள் தெளிவாக சொல்வோம். சில கட்சிகள் எங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை வெளிப்படையாக சொல்ல முடியாது. சசிகலாவை அதிமுகவில் இணைக்கும் எண்ணமே இல்லை. நான் இதை பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக வலிமையாக உள்ளது. அது போல் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் சேர்வதற்கு வாய்ப்பு இல்லை. முதல் முறையாக எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்த போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூறிவிட்டார்.