‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக தற்காலிகமாக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரைச் சந்தித்துப் பேசியதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நீக்கினார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய்யின் தவெகவில் இணைந்து கொண்டார். அதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி குறித்து செங்கோட்டையன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பத்திற்கு பிறகு செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிச்செட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி இன்று (30-11-25) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மக்கள் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். அதில் அவர், “இன்றைக்கு இந்த தொகுதியில் ஒருத்தர் எம்.எல்.ஏவாக இருந்தார். நீங்க ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தப்பட்டவர். ஆனால் ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகுகிறார். ஆனால், ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டார்களா? அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். அதிமுக ஆட்சி மலர்ந்த உடனே இந்த தொகுதி எடப்பாடி தொகுதிக்கு மேல் வளரும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தால் விவசாயிகள் நடத்தி நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைப்படம் இல்லாததால் அவர் வரவில்லை என்றார். இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்று கட்சியில் சேர்ந்தீர்கள்?
உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக, உங்களுக்கு பதவி கொடுத்தது அதிமுக. பல விவசாய சங்க தலைவர்கள் அனைவரும், அதிமுக ஆட்சியில் தான் நாங்கள் 50 ஆண்டுகாலம் போராடி வந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றி தந்தீர்கள், அதனால் அதிமுகவுக்கு பாராட்டு விழா நடத்துகிறோம் என்று கூறி அவினாசியில் பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த கூட்டத்தை புறக்கணித்தவர் இந்த தொகுதியினுடைய முன்னாள் எம்.எல்.ஏ. இவரா உங்களுக்கு நன்மை செய்ய போகிறார்? எதிர்க்கட்சிக்காரர்கள் நம்மை மதிக்கிறார்கள். ஆனால் நம் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அந்த கூட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என்றால் இவரா மக்கள் மீது அக்கறை கொண்டவர்?. கட்சி கட்டுப்பாட்டை மீறி வேறொரு இயக்கத்தினுடைய முக்கிய பிரமுகர்களைச் சந்தித்தார். அதுவே தவறு, அதையும் நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அத்திக்கடவு அவனாசி திட்டத்தில் பங்கு பெறவில்லை அதையும் நாங்கள் கண்டுகொள்ளாமல் தான் இருந்தோம். அவருக்கு உண்டான மரியாதையை நாங்கள் கொடுத்தோம். ஆனால் அவர் திருந்துவது மாதிரி அல்ல.
அதற்கு மாறாக மனம் திறந்து பேசுகிறேன் என்று சொல்லி அதிமுக தலைமைக்கு காலக்கெடு விதித்திருக்கிறார். அப்படிப்பட்டவரை நாங்கள் எப்படி இயக்கத்தில் தொடர வைக்க முடியும்? அப்படிப்பட்டவரை எப்படி இயக்கத்திலே தொடர்வதற்கு தலைமை அனுபவிக்கும்?. மூத்த தலைமைக்கழக நிர்வாகிகளோடு கலந்து ஆலோசித்து தலைமைக்கு எதிராக பொது வெளியில் பேட்டி கொடுத்ததால் அவரை பதவியில் இருந்து நீக்கினோம். அப்போதாவது அவர் திருந்துவார் என்று பார்த்தோம். ஆனால் திருந்துவது மாதிரி அல்ல. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தேவர் குருபூஜையின்போது அவர் சந்தித்துப் பேசினார். அதனால் அதிமுகவில் தொடர அவர் லாயக்கற்றவர் முடிவு செய்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினோம். அவர் கிட்டத்தட்ட 2, 3 ஆண்டுகாலமாக இயக்கத்தில் இருந்துகொண்டே, திட்டமிட்டு இயக்கத்திற்கு எதிராக செயல்பட்டார், இயக்கத்திற்கு துரோகம் விளைவித்தார். இந்த இயக்கத்திற்கு யார் துரோகம் செய்தாலும் அவரை ஆண்டவன் பார்த்துக்கொள்வான்” என்று விமர்சித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/30/eds-2025-11-30-20-05-41.jpg)