குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாக இந்தியத் துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 09ஆம் தேதி (09.09.2025) காலை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் முதல் நபராகப் பிரதமர் மோடி வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மொத்தம் 758 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இந்த வாக்குப்பதிவைத் தொடர்ந்து அன்றையதினமே வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றார். வெற்றிக்கு 358 வாக்குகள் தேவைப்படும் நிலையில், சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் (12.09.2025) சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அதாவது முறைப்படி சி.பி. ராதாகிருஷ்ணனுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கான நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜகவின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் (16.09.2025 - செவ்வாய்க்கிழமை) டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக மூத்த தலைவர்களையும் சந்தித்துப் பேசக் கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/14/eps1-2025-09-14-23-51-17.jpg)