Edappadi Palaniswami criticizes the magalir urimai thogai announced by Tamil Nadu government
தமிழக அரசு, மகளிர் உரிமைத் தொகையைப் பிப்ரவரி மட்டுமல்லாமல் வருகின்ற மார்ச், ஏப்ரல் மற்றும் மே (கோடை தொகுப்பு உட்பட) ஆகிய மாதங்களுக்கும் சேர்த்து ரூ.5,000யை மகளிருக்கு வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பல்வேறு விதமான விமர்சனங்களை முன் வைத்தார். மேலும், திமுக தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தின் காரணமாக, இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, “ஆளும் திமுக அரசு இன்று மகளிருக்கு 5000 ரூபாய் வழங்கியுள்ளது. அதற்கு, சில காரணங்களை முதல்வர் தெரிவித்துள்ளார். அதில் அதிமுக மற்றும் பாஜகவை விமர்சித்துள்ளார். அதாவது, வருகின்ற சட்டமன்ற தேர்தலைக் காரணம் காட்டி, இந்த உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள். அதனால் குடும்பத்தலைவிகள் கடினமான சூழலுக்குத் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளார். இது ஒரு அபத்தமான பொய்யான ஒரு தகவல். செயல்பாட்டில் இருக்கும் அரசு நலத் திட்டங்கள் எந்த காரணங்களாலும் நிறுத்தப்படமாட்டாது. இதற்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பொது கூட, இந்த உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதை யாரும் நிறுத்தவில்லை.
இருப்பினும், வருகின்ற தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதிலும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மகளிர் உதவித்தொகை மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பு கொடுத்து மகளிரின் வாக்குகளைப் பெற இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். இன்றைய சூழலில் திமுக மக்களிடம் செல்வாக்கை இழந்துவிட்டது. திமுகவிற்குத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது, 2022, 2023, 2024 மற்றும் 2025 எனக் கடந்த நான்கு ஆண்டுகளாகக் கோடைக் காலம் வந்தது முதல்வருக்குத் தெரியவில்லை. இப்போது தேர்தல் வர இருப்பதால் இந்தாண்டு மட்டும் கோடைக்காலம் இருப்பது அவருக்குத் தெரிகிறது. அதனால், இது முழுக்க முழுக்க தேர்தலை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குடும்பத்தலைவிகள் படும் கஷ்டத்தைப் பார்த்து இந்த தொகை வழங்கப்படவில்லை. தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தினால் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தலில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்து, அதன் காரணமாகத் தான் நீங்கள் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 27 மாதங்கள் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால், நாங்கள் எதிர்க்கட்சி என்ற முறையிலே, இந்த உதவித்தொகையைத் தரக்கோரி வலியுறுத்திவந்தோம். அதன் பிறகு தான் மகளிருக்கு உதவித்தொகை வழங்கினார்கள்.
வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், 1.31 கோடி பயனாளர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இவர்களுக்கு முதல் 27 மாதங்கள் உதவித்தொகை வழங்கப்படவில்லை. மேலும், இரு மாதங்களுக்கு முன்பு சில விதிகளைத் தளர்த்தி 20 லட்சம் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த 20 லட்சம் மகளிருக்கும் இத்தனை ஆண்டுகளாக உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. இப்போதெல்லாம் அவர்கள் கடினமான சூழலுக்குத் தள்ளப்படவில்லையா? அதனால், திமுக தேர்தலை நோக்கமாகக் கொண்டு தான் அரசு இந்த தொகையை வழங்கியுள்ளது” என்று தெரிவித்தார்.
Follow Us