Advertisment

“நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

edappadi

Edappadi Palaniswami criticizes The Chief Minister, as usual, has complained about me

ஈரோடு மாவட்டம் ஜெயராமபுரம், மொடக்குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லானின் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.11.2025) காலை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Advertisment

இந்த நிலையில், முதல்வரின் பேச்சுக்கு அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “ஈரோட்டில் மேடை ஏறிய முதலமைச்சர், வழக்கம் போல என்னைப் பற்றியே புலம்பித் தள்ளியுள்ளார். அவர் எதிர்க்கட்சியில் இருந்த போது, எது நடந்தாலும் ‘ஆக, எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்’ என்று கூறிக்கொண்டே இருந்த பழக்க தோஷம் மாறவில்லை போல. ‘நான் டெல்டாக்காரன்’ என்று பச்சைதுண்டு போட்டு டயலாக் பேசிவிட்டு, மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டக் கையெழுத்து போட்டு, அதே டெல்டாவை பாலைவனமாக்கத் துடித்த துரோகத்தின் தொடர்ச்சியாக தானே, இப்போது நெல்மணிகள் நனைவதைக் கண்டும் காணாமல் இருந்தார் இந்த துரோகி ஸ்டாலின்?

Advertisment

ஆட்சிக்கு வந்து இந்த நான்கரை ஆண்டுகளும், விவசாயிகளுக்கு அடிப்படைத் தேவையான குறுவை சாகுபடிக்கான பயிர்க் காப்பீட்டைக் கூட அளிக்காமல், முறையாக நீரைத் திறக்காததால், கடைமடை வரை நதிநீர் சென்று சேராததால், டெல்டா பகுதியில் 2 லட்சம் ஏக்கர் வரை தொடர்ந்து பாதித்து, விவசாயிகள் தவித்த போது கூட, விவசாயிகள் மீது அக்கறை கொள்ளாமல் வஞ்சித்த துரோகி தானே நீங்கள்? உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே சொல்லியிருப்பார்கள், இந்த எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு செய்தன என்னவென்று. நூறு ஏரிகளுக்கு நீரேற்றும் சரபங்கா திட்டம் முதல், தலைவாசல் கால்நடைப் பூங்கா, அத்திக்கடவு அவிநாசி திட்டம் வரை மேற்கு மண்டலத்திற்காக நான் கொண்டுவந்த எண்ணற்ற திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் போது, இதெல்லாம் நான் கொண்டு வந்த திட்டம் என்று தெரியவில்லையா இந்த முதல்வருக்கு?

கோவை மட்டுமல்ல, மதுரை மெட்ரோவும் வர வேண்டும் என இப்போது கூட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது கோரிக்கை வைத்துள்ளேன் நான். எங்கள் அரசு முன்மொழிந்த மெட்ரோ திட்டத்திற்கான DPR-ஐக் கூட முறையாக சமர்ப்பிக்கத் தெரியாமல், உங்கள் அரசு சமர்ப்பித்த DPR-ல் உள்ள முரண்பாடுகளை மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அதையெல்லாம் நிவர்த்தி செய்து மறு சமர்ப்பிப்பு செய்வதை விட்டுவிட்டு, இதை வைத்து தனது அற்ப அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்கு உண்மையிலேயே ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். அதிமுக ஆட்சியில் கோவைக்கும் மதுரைக்கும் மெட்ரோ ரயில் திட்டம் வரும் என்று சொன்னதைக் கேட்டு வயிற்றெரிச்சல்பட்டு, திமுக ஆட்சி என்பதால் புறக்கணிப்பா? என்று கேட்கிறார். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் ஒரு கையாலாகாத, நிர்வாகத் திறனற்ற முதல்வர் என்பதைத் தான் நாங்கள் எப்போதும் கூறுகிறோம்.

உங்கள் ஆட்சி இருக்கும் போது தான், சென்னை மெட்ரோ 2-ம் கட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என உள்துறை அமைச்சரை சந்தித்து நான் வலியுறுத்தினேன். எங்களின் கோரிக்கையினை ஏற்று தான், மத்திய அரசும் ரூ. 63,246 கோடியை ஒதுக்கி உத்தரவிட்டது. ஆக, அதிமுக எப்போதும் மக்களுடன் நின்று, மக்களுக்கு நன்மை செய்து வருகிறது. நீங்களோ, நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்களுக்கு எந்த நன்மையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளீர்கள். இப்போது சொல்லுங்கள், யார் துரோகி என்று. ரெட் ஜெயண்ட் வாசலுக்கு ரெய்டு வந்ததும் வியர்க்க விறுவிறுக்க, வியர்வையைத் துடைக்க கர்சீப்பைக் கூட மறந்துவிட்டு டெல்லிக்கு பதறிப் பறந்தீர்களே- அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா ஸ்டாலின் அவர்களே? நான் எப்போதும் என் உயிருக்கு உயிரான தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார். ஆனால், ஒரே ஒரு கேள்வி, எல்லாவற்றையும் எடப்பாடி பழனிசாமி தான் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் எதற்கு சார் முதல்வராக இருக்கீங்க?” என்று தெரிவித்துள்ளார். 

edappadi palanisami eps mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe