பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் விழா மற்றும் 63வது குருபூஜை, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று (30.10.2025) நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஆகியோர் மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

அதனை தொடர்ந்து, பசும்பொன் அருகே செங்கோட்டையன், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர்  அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்து பேசினர்.  இதையடுத்து பசும்பொன்னுக்கு சென்ற மூவரும் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் மூன்று பேரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

Advertisment

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் 10 நாட்களுக்குள் இதை செய்யவில்லை என்றால் ஒத்த கருத்துடையவர்களை ஒருங்கிணைக்கும்  முயற்சிகளில் இறங்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருந்தார். இதனால், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், கட்சியின் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கி, எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, செங்கோட்டையன் அண்மை காலமாகவே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்து பேசி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தியது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரையில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “இது ஏற்கெனவே போட்ட திட்டம் தானே. அதிமுகவில் இருந்தபோதே குழி பறித்த காரணத்தினால் தான் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இப்படிப்பட்ட துரோகிகள் அதிமுகவில் இருந்ததால் தான் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எங்களால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. இவர்களெல்லாம் திமுகவின் பி டீமாக இருந்து செயல்படுகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரைக்கும் தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை பற்றி பேசுவதே வீண், கால நேரம் தான் வீணாக போகிறது” என்று கூறினார். 

Advertisment