கோயம்புத்தூரில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (10-11-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, சிறுமிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குற்றச் செயலில் ஈடுபடுகின்றவர்கள், கொஞ்சம் கூட அச்சம் இல்லாமல், காவல்துறை மீது பயமில்லாமல் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொடர் நிகழ்வுகள் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் இருக்கின்றதா என்ற ஒரு கேள்வி மக்களிடத்தில் எழும்பி இருக்கிறது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது.
இந்த அரசு தங்களுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் டிஜிபியாக வரவேண்டும் என்ற அடிப்படையில் தான் அவர்கள் இதுவரை நிரந்தர டிஜிபி யை நியமிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் விரைவாக தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய பிறகும் இன்னும் அந்த பணியை தொடரவில்லை. நிரந்தர டிஜிபி நியமிக்காத காரணத்தினால் தான் முறையாக சட்ட ஒழுங்கு பராமரிக்கப்பட முடியாத ஒரு சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான வாக்காளர்கள் இறந்தவர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் அவர்கள் அந்த வாக்காளர் பட்டியிலில் இடம்பெற்றே இருக்கிறார்கள். அதே போல நகரத்தில் குடியிருக்கின்றவர்கள் இடம்பெயர்ந்து போய்விடுகிறார்கள். அவர்களுடைய பெயரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றே வருகிறது.
இப்படி முறைகேடாக இருக்கின்ற வாக்காளர்களை எல்லாம் விடுவிக்கப்பட்டு தகுதியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் எஸ்.ஐ.ஆர் பணி நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர் என்றாலே திமுக அலறுகிறார்கள். கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பதறுகிறார்கள். இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் எதிர்க்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு மக்களிடத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி அவர்கள் வாக்குகள் பறிபோகும் என்று ஒரு தவறான செய்தியை வெளிப்படுத்திட்டு இருக்கிறார்கள்.
அதிமுகவை பொறுத்தவரைக்கும் ஒரு தகுதியான வாக்காளர், பட்டியலில் இடம்பெற வேண்டும், தகுதியானவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்களிக்க வேண்டும் என்பது தான் நிலைப்பாடு. அந்த காரணத்திற்காகத் தான் இந்த எஸ்.ஐ.ஆர்-ஐ நாங்கள் ஆதரிக்கிறோம். எஸ்.ஐ.ஆர் தொடர்பாக திமுக தவறான செய்தியை பரப்பிவிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார்கள். அதை சரி செய்வதற்காக அந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அதிமுக வழக்கு போட்டுள்ளது. திமுக தவறான தகவல்களை தெரிவிக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக வழக்கு போட்டுள்ளது” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, அதிமுகவை எடப்பாடி பழனிசாமியின் மகன், மருமகன் ஆகியோர் தான் வழிநடத்துகிறார்கள் என்று செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “ஒரு நாளாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதுவரைக்கும் யாராவது அப்படி சொல்லி இருக்காங்களா?. இங்கிருந்து பிரிந்து பல பேர் வெளியே போயிருக்கிறார்கள். அப்படி ஏதாவது குற்றச்சாட்டு சொல்லி இருக்காங்களா? அவருக்கு வேற குற்றச்சாட்டு கண்டுபிடிக்க முடியவில்லை, இந்த குற்றச்சாட்டை சொல்லிருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/edapcovai-2025-11-10-18-40-10.jpg)