சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை பல்லாவரத்தில் இன்று (26-02-26) தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எச்சரிக்கை விடுகிறோம். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இப்படிப்பட்ட செயலில் ஈடுபடும் எவராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டாலின் எதிர்கட்சியில் இருந்தார், அப்போது மோடி, சென்னைக்கு வருகிற போது அவரை எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விட்டார். ஆளுங்கட்சியாக வந்த பிறகு, ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகு ரத்தின கம்பளத்தை விரித்து பிரதமரை வரவேற்று செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில அவரை கலந்து கொள்ள வைத்தார். கேலோ இந்தியா சென்னையில் நடத்தினார்கள், அதற்கு அவரை வரவழைத்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று அந்த விளையாட்டை துவக்கி வைக்க செய்தார்.

Advertisment

கலைவானர் அரங்கில் மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்ட பல திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போதும் அவரை அழைத்து வந்து அந்த நிகழ்ச்சியை நடத்தினார். பாரத பிரதமர் மோடி சென்னைக்கு வந்த போது வெள்ளை  குடை பிடித்தார். இதுதான் ஸ்டாலினுடைய இரட்டை வேடம். ஸ்டாலின் ஆளுகின்ற நிலை வருகின்ற போது ஒரு நிலைப்பாடு, எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது ஒரு நிலைப்பாடு. ரெட்டை வேடம் போடுகின்ற கட்சி திமுக கட்சி என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். எதிர்கட்சியா இருக்கின்ற போது வீர வசனம் பேசுவார், ஆளுங்கட்சியான பிறகு அப்படியே அமைதியாகிவிடுவார்.

Advertisment

39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுக, திமுக கூட்டணி கட்சி சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருக்கின்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார்கள். ஆனால் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் பெஞ்சை தேய்த்துட்டு இருக்கிறார்கள். ஒரு நாளாவது நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்த வரலாறு இருக்கிறதா?. தேர்தல் நேரத்திலே வீரவசனம் பேசுவார்கள், மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று  ஆட்சிக்கு பிறகு கொடுக்கப்பட்ட  வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுவிடுவார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் இரட்டை வேடும் போடுகின்ற தலைவர் திமுக தலைவர் ஸ்டாலின் தான்” என்று பேசினார்.