ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு (2026) 5 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 13 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 113 பேருக்கு பத்மஸ்ரீ என மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் ஆகிய இருவரும் ஒரு விருதாளராக கருதப்படுவார்கள்.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2026ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசின் விருதுப்பட்டியலில் பத்மபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.கே.எம். மயிலானந்தன், மற்றும் மருத்துவர் கள்ளிபட்டி ராமசாமி பழனிச்சாமிக்கும் வாழ்த்துகள்.
பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த, எம்ஜிஆரின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகச் சேவை ஆற்றிய ஹெச்.வி. ஹண்டே, கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்தி நடேசன், வேளாண் விஞ்ஞானி கே.ராமசாமி, சென்னை ஐஐடி இயக்குநர் வீழிநாதன் காமகோடி, எழுத்தாளர் சிவசங்கரி, கர்நாடக இசைக் கலைஞர்கள் காயத்திரி பாலசுப்பிரமணியன், ரஞ்சனி பாலசுப்பிரமணியன், முன்னாள் இந்தியக் காவல் பணி உயர் அதிகாரி விஜயகுமார், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், ஆர்.கிருஷ்ணன், ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர், திருவாரூர் பக்தவத்சலம், நடிகர் மாதவன், புதுச்சேரி கே. பழனிவேல் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/25/padma-award-2026-2026-01-25-23-05-50.jpg)
பத்ம விருதுகள் பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பலருக்கும் இவ்விருதுகளை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு அதிமுக சார்பிலும் தமிழக மக்களின் சார்பிலும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/25/eps-mic-1-2026-01-25-23-05-23.jpg)