Edappadi Palaniswami condems mk stalin and he says People live in fear of what will happen when
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசுவாமி (42) என்பவர், தென்காசி செங்கோட்டை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று இவர் தனது அலுவலகத்தில் இருந்த போது மர்ம கும்பல், முத்துக்குமாரசுவாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமாரசுவாமியின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முத்துக்குமாரசுவாமியை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பட்டப்பகலில் அரசு வழக்கறிஞரின் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியதோடு, உயிருக்கு பயந்து ஓடிய அவரை வீதிகளில் ஓட ஓட விரட்டிச்சென்று படுகொலை செய்துவிட்டுத் தப்பியிருக்கிறது.
இது தமிழ்நாடா.. இல்லை கொலைநாடா..? இந்த சம்பவம் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கின் முகமூடியைக் கிழித்து, அதன் உண்மையான அலங்கோலத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளது. குற்றசம்பவங்களில் NO.1 மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியது தான் இந்த ‘ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை’ என விளம்பரப்படுத்த வேண்டியது தானே முதல்வரே? ரோட்டிலும் கொலை, கோர்ட்டிலும் கொலை, பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள், போலீஸ்காரர்களும் பாதிக்கப்படுகிறார்கள், இப்படி தமிழ்நாட்டில் சிறுமி முதல் முதியோர் வரை, அரசு மருத்துவர் முதல் அரசு வழக்கறிஞர் வரை, என யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழல்.
இப்படி சட்டம் ஒழுங்கை காற்றில் பறக்க விட்டுவிட்டு, தங்கள் அன்றாட வாழ்வில், எப்போது என்ன நடக்குமோ என்ற அச்ச உணர்வுடன் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திய முதல்வருக்கு எனது கடும் கண்டனங்கள். தென்காசி அரசு வழக்கறிஞர் படுகொலை சம்பவம் குறித்து, உடனடியாக உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us