Edappadi Palaniswami condemns Tiruttani bus stand was renamed Kalaignar changing Anna
திருத்தணி பேருந்து நிலைய பெயர் மாற்றத்துக்கு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ‘திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், ஏற்கெனவே, ‘அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்’ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்றுவரை இயங்கி வருகிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டாமல், ‘கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம்’ என்று பெயர் சூட்டியிருப்பது, விடியா திமுக ஆட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திராவிட இயக்கத் தலைவருமான பேரறிஞர் அண்ணாவின் பெயரை புறக்கணிப்பு செய்வது, ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் இழைக்கப்படும் அநீதி. பேரறிஞர் அண்ணாவின் பெயரை மறைப்பதுதான் திராவிட மாடலா..?
தந்தையின் பெயருக்கு விளம்பரம் செய்யவேண்டுமானால், திமுக-வின் அறக்கட்டளையில் இருந்து செய்ய வேண்டுமே தவிர, ஏற்கெனவே பேரறிஞர் அண்ணா பெயரில் இயங்கிவரும் பேருந்து நிலையத்தின் பெயரை மாற்றக்கூடாது. கலைஞரின் பெயர் சூட்டப்படுவதால் அண்ணா பெயருக்கு அவமதிப்பு ஏற்படுவதுடன், தேவையற்ற சர்ச்சையையும், பிரிவினையையும் உருவாக்கும். எனவே, இந்தப் பெயர் மாற்ற அரசியலை அதிமுக கடுமையாகக் கண்டிக்கிறது. மக்களுக்கு நீண்ட நாள் பயனளிக்க வேண்டிய பேருந்து நிலையத்தில் கட்டுமானத்தின் தரம், பாதுகாப்பு, கழிவுநீர் வசதிகள், பயணிகள் அமர்வு வசதிகள், போக்குவரத்து வழிகள் போன்றவை இன்னமும் ஆய்வு செய்யப்படவே இல்லை.
இவையெல்லாம் முடிவதற்கு குறைந்தது ஒருமாத காலம் தேவைப்படும் நிலையில், தேர்தலை மனதில் நிறுத்தி அவசர, அவசரமாக 4.3.2026 அன்றே திறப்பு விழா நடத்த இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இனி, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு, இப்படி தப்பும் தவறுமாக விளம்பர மோகத்தில், பொதுமக்கள் அதிக அளவு பயன்படுத்தக்கூடிய இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்வதையும், போதிய வசதிகளை ஏற்படுத்தாமல் அவசர கதியில் திறப்பு விழா நடத்துவதையும், மக்களின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதையும் , விடியா திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us