Edappadi Palaniswami condemns for arrested struggling nurses
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் 1,500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று (18-12-25) சென்னை சிவானந்தம் சாலையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். காலை தொடங்கிய இப்போராட்டம், மாலை 6 மணிக்கு மேலாக நீடித்தது.
அதனை தொடர்ந்து காவல்துறையினர், போராட்டம் நடத்திய செவிலியர்களை கைது செய்து பேருந்துகள் மூலமாக அவர்களை அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர். ஆனால், செவிலியர்கள் அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியதால், அவர்களை மீண்டும் கைது அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
இந்த சம்பவத்திற்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “விடியா திமுக அரசு, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356ஐ நிறைவேற்றக்கோரியும், ஜெயலலிதாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (18.12.2025) தமிழ்நாடு செவிலியிர்கள் மேம்பாடு சங்கத்தின் சார்பாக அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை சிவானாந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான செவிலியர்கள் கலந்து கொண்டனர். நேற்று இரவு 7.30 மணிக்கு காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுமார் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை கைது செய்து அவர்களை பேருந்துகள் மூலமாக அழைத்துச் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டனர்.
இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் கலையமாட்டோம் எனக்கூறி விடியா திமுக அரசுக்கு எதிரான கோஷங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, விடியா திமுக அரசின் காவல்துறை அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கடந்த நான்கரை ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விடியா திமுக, ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us