Edappadi Palaniswami condemns DMK government is playing with the lives of students
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்துள்ள கொண்டாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த மோகித் என்ற மாணவன் உணவு இடைவெளியின் பொழுது வெளியே வந்த பொழுது பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஏழாம் வகுப்பு மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே, ரொம்ப நாளாகவே அந்த சுவர் இடியும் நிலையில் இருந்ததாகவும், அதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டதே இந்த விபத்தில் காரணம் என்றும் ஊர் பொதுமக்களும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில், மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கைப்பிடி சுவர் இடிந்து விழுந்ததில் 7-ம் வகுப்பு படிக்கும் மோகித் என்ற மாணவன் உடல் நசுங்கி உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்த மாணவனின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்று சினிமா மேடை போல ஒரு மேடை அமைத்து, தனக்கு தானே ஒரு வெற்றுப் பாராட்டு விழா நடத்திய செலவில், அரசுப்பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிப்பதில் செலவிட்டு இருந்தால், இன்றைக்கு இந்த பரிதாப உயிரிழப்பை நிச்சயம் தவிர்த்திருக்கலாம். பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக இருப்பவரோ, இன்னும் ரசிகர் மன்றத் தலைவர் மனநிலையில் இருந்து வெளிவராமல், உதயநிதி பிறந்தநாளைக் கொண்டாடுவதில் செலவிடும் நேரத்தை, தன் துறை சார்ந்த பணிகளில் என்றைக்காவது செலவிட்டு இருக்கிறாரா?
பாழடைந்த அரசுப்பள்ளிக் கட்டுமானங்களால், மாணவர்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்த மாணவர் மோகித்தின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்குவதுடன், அரசுப்பள்ளிகளின் கட்டுமானத்தை போர்க்கால அடிப்படையில் சீர்செய்யுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினின் விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us